குறள் (Kural) - 810

குறள் (Kural) 810
குறள் #810
விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.

பொருள்
பழமையான நண்பர்கள் தவறு செய்த போதிலும், அவர்களிடம் தமக்குள்ள அன்பை நீக்கிக் கொள்ளாதவர்களைப் பகைவரும் விரும்பிப் பாராட்டுவார்கள்.

Tamil Transliteration
Vizhaiyaar Vizhaiyap Patupa Pazhaiyaarkan
Panpin Thalaippiriyaa Thaar.

மு.வரதராசனார்

(தவறு செய்த போதிலும்)பழகிய நண்பரிடத்தில் தம் உரிமை பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும் விரும்பப்படுதற்குறிய சிறப்பை அடைவர்.

சாலமன் பாப்பையா

பழைய நண்பர்கள் பிழையே செய்தாலும், அவருடன் பகை கொள்ளாது நம் நட்பை விடாதவர், பகைவராலும் விரும்பப்படுவர்.

கலைஞர்

பழமையான நண்பர்கள் தவறு செய்த போதிலும், அவர்களிடம் தமக்குள்ள அன்பை நீக்கிக் கொள்ளாதவர்களைப் பகைவரும் விரும்பிப் பாராட்டுவார்கள்.

பரிமேலழகர்

பழையார்கண் பண்பின் தலைப்பிரியாதார் - பழைய நட்டார் பிழை செய்தாராயினும் அவர்மாட்டுத் தம் பண்பின் நீங்காதார்; விழையார் விழையப்படுப - பகைவரானும் விரும்பப்படுவர். (தம் பண்பாவது, செய்யாத முன் போல அன்புடையராதல். மூன்றன் உருபும் சிறப்பு உம்மையும் விகாரத்தால் தொக்கன. அத்திரிபின்மை நோக்கிப் பகைவரும் நட்டாராவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் பழைமையறிவார் எய்தும் பயன் கூறப்பட்டது.)

புலியூர்க் கேசிகன்

பழமையான நண்பர்களிடத்திலும், சற்றும் விலகாமல் நடந்து கொள்ளும் பண்பினர், தம் பகைவராலும் விரும்பி நட்பாக்கிக் கொள்ளப் படுவார்கள்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)பழைமை (Pazhaimai)