குறள் (Kural) - 808

குறள் (Kural) 808
குறள் #808
கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்.

பொருள்
நண்பர்கள் செய்யும் குற்றத்தைப் பிறர்கூறி அதனை ஏற்றுக் கொள்ளாத அளவுக்கு நம்பிக்கையான நட்புரிமை கொண்டவரிடத்திலேயே அந்த நண்பர்கள் தவறாக நடந்து கொண்டால் அவர்களுடன் நட்புக் கொண்டிருந்த நாளெல்லாம் வீணான நாளாகும்.

Tamil Transliteration
Kelizhukkam Kelaak Kezhudhakaimai Vallaarkku
Naalizhukkam Nattaar Seyin.

மு.வரதராசனார்

பழகிய நண்பர் செய்த தவறு பற்றிப் பிறர் சொன்னாலும், கேளாமலிருக்கும் உரிமை வல்லவர்க்கு, அந்த நண்பர் தவறுசெய்வாரானால் அது பயனுள்ள நாளாகும்.

சாலமன் பாப்பையா

நண்பன் உரிமை எடுத்துச் செய்து பிழையை அடுத்தவர் எடுத்துக்காட்டியும் ஏற்றுக் கொள்ளாத நட்புரிமை உடையவர்க்கு நண்பன் பிழை செய்யும் நாள் பயனுள்ள நாளாம்.

கலைஞர்

நண்பர்கள் செய்யும் குற்றத்தைப் பிறர்கூறி அதனை ஏற்றுக் கொள்ளாத அளவுக்கு நம்பிக்கையான நட்புரிமை கொண்டவரிடத்திலேயே அந்த நண்பர்கள் தவறாக நடந்து கொண்டால் அவர்களுடன் நட்புக் கொண்டிருந்த நாளெல்லாம் வீணான நாளாகும்.

பரிமேலழகர்

கேள் இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு - நட்டார் செய்த பிழையைத் தாமாகவே யன்றிப் பிறர் சொன்னாலும் கொள்ளாத உரிமை அறியவல்லார்க்கு; நட்டார் இழுக்கம் செயின் நாள் - அவர் பிழை செய்வாராயின் அது பயன்பட்ட நாளாம்.(பிழையாவன: சொல்லாது நற்பொருள் வௌவல், பணியாமை,அஞ்சாமை முதலாயின. கேட்டல் - உட்கோடல். 'கெழுதகைமைவல்லார்' என்பது ஒரு பெயராய், 'கேளாத' என்னும் எச்சத்திற்கு முடிபாயிற்று. செய்து போந்துழியல்லது அவ்வுரிமை வெளிப்படாமையின், செய்யாதன நாளல்லவாயின. இதனான் பிழை பொறுத்தற் சிறப்புக் கூறப்பட்டது.)

புலியூர்க் கேசிகன்

நண்பரின் குற்றங்குறைகளைப் பிறர் சொன்னாலும் கேளாத நட்புரிமை வல்லவர்களுக்கு, நண்பர் குற்றம் செய்தால், அது அந்நாளின் குறையாகவே தோன்றும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)பழைமை (Pazhaimai)