குறள் (Kural) - 798

குறள் (Kural) 798
குறள் #798
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.

பொருள்
ஊக்கத்தைச் சிதைக்கக்கூடிய செயல்களையும், துன்பம் வரும்போது விலகிவிடக்கூடிய நண்பர்களையும் நினைத்துப் பார்ககாமலே இருந்து விட வேண்டும்.

Tamil Transliteration
Ullarka Ullam Sirukuva Kollarka
Allarkan Aatraruppaar Natpu.

மு.வரதராசனார்

ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை எண்ணாமலிருக்க வேண்டும், அதுபோல் துன்பம் வந்த போது கைவிடுகின்றவரின் நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா

உற்சாகம் குறைவதற்கான செயல்களை எண்ண வேண்டா; நம் துன்பக் காலத்தில் நம்மைக் கைவிட்டு விடுபவரின் நட்பைக் கொள்ள வேண்டா.

கலைஞர்

ஊக்கத்தைச் சிதைக்கக்கூடிய செயல்களையும், துன்பம் வரும்போது விலகிவிடக்கூடிய நண்பர்களையும் நினைத்துப் பார்ககாமலே இருந்து விட வேண்டும்.

பரிமேலழகர்

உள்ளம் சிறுகுவ உள்ளற்க - தம் ஊக்கம் சுருங்குவதற்குக் காரணமாய வினைகளைச் செய்ய நினையாதொழிக; அல்லற்கண் ஆற்று அறுப்பார் நட்புக் கொள்ளற்க - அதுபோலத் தமக்கு ஒரு துன்பம் வந்துழிக் கைவிடுவார் நட்பினைக் கொள்ளாதொழிக. (உள்ளம் சிறுகுவ ஆவன, தம்மின் வலியாரோடு தொடங்கியனவும் பயனில்லனவும் ஆம். 'ஆற்று' என்பது முதனிலைத் தொழிற் பெயர். முன்னெல்லாம் வலியராவார் போன்று ஒழிதலின், 'ஆற்று அறுப்பார்' என்றார். எடுத்துக்காட்டு உவமை. கொள்ளின் அழிந்தேவிடும் என்பதாம்.)

புலியூர்க் கேசிகன்

உள்ளம் சிறுமை கொள்ளும்படி எதனையுமே நண்பனைக் குறித்து எண்ணக்கூடாது; அல்லல் காலத்திலே கைவிட்டுப் போனவர் நட்பையும் விட்டுவிட வேண்டும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)நட்பாராய்தல் (Natpaaraaidhal)