குறள் (Kural) - 796

குறள் (Kural) 796
குறள் #796
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.

பொருள்
தீமை வந்தால் அதிலும் ஒரு நன்மை உண்டு அந்தத் தீமைதான் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அளந்து காட்டும் கருவியாகிறது.

Tamil Transliteration
Kettinum Untor Urudhi Kilaignarai
Neetti Alappadhor Kol.

மு.வரதராசனார்

கேடு வந்த போதும் ஒருவகை நன்மை உண்டு, அக் கேடு ஒருவனுடைய நண்பரின் இயல்புகளை நீட்டிஅளந்து பார்ப்பதொரு கோலாகும்.

சாலமன் பாப்பையா

எவன் நமக்கு உற்ற நண்பன் என்பதை நீட்டி அளந்து கொள்ளும் அறிவு நம் துன்பத்தில் உண்டு.

கலைஞர்

தீமை வந்தால் அதிலும் ஒரு நன்மை உண்டு. அந்தத் தீமைதான் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அளந்து காட்டும் கருவியாகிறது.

பரிமேலழகர்

கிளைஞரை நீட்டி அளப்பது ஓர் கோல் - ஒருவனுக்குக் கேடு என்பது தன் நட்டாராகிய புலங்களை எஞ்சாமல் அளப்பதோர் கோல்; கேட்டினும் ஓர் உறுதி உண்டு - ஆகலின் அதன்கண்ணும் அவனால் பெறப்படுவதோர் நல்லறிவு உண்டு. (தத்தம் நட்பெல்லைகள் சுருங்கியிருக்கவும் செல்வக்காலத்துப் புறத்துத் தோன்றாமல் போந்தார், பின் கேடு வந்துழிச் செயல் வேறுபடுதலின், அக்கேட்டால் அவை வரையறுக்கப்படும் என்பதுபற்றிக் கேட்டினைக் கோலாக்கியும்,அதனால் அவரை அளந்தறிந்தால் ஆவாரையே கோடலின், அவ்வறிவை 'உறுதி' என்றும் கூறினார். கிளைஞர்: ஆகுபெயர், இஃது ஏகதேச உருவகம். இவை நான்கு பாட்டானும் ஆராயுமாறும், ஆராய்ந்தால் நட்கப்படுவார் இவர் என்பதூஉம் கூறப்பட்டன.)

புலியூர்க் கேசிகன்

ஒருவனுக்கு கெடுதல் உண்டாவதாலும் ஒருவகை நன்மை உண்டு; அது, நண்பரின் உறவை அளந்து அறியும் அளவுகோலாக அது விளங்குவதுதான்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)நட்பாராய்தல் (Natpaaraaidhal)