குறள் (Kural) - 787

குறள் (Kural) 787
குறள் #787
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.

பொருள்
நண்பனைத் தீயவழி சென்று கெட்டுவிடாமல் தடுத்து, அவனை நல்வழியில் நடக்கச் செய்து, அவனுக்குத் தீங்கு வருங்காலத்தில் அந்தத் தீங்கின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதே உண்மையான நட்பாகும்.

Tamil Transliteration
Azhivi Navaineekki Aaruyththu Azhivinkan
Allal Uzhappadhaam Natpu.

மு.வரதராசனார்

அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவுவந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும்.

சாலமன் பாப்பையா

அழிவு தரும் வழிகளில் நண்பன் சென்றால் தடுத்து, நல்ல வழியில் அவனைச் செலுத்தி அவனுக்குக் கேடு வரும் என்றால் அதை அவனுடன் பகிர்வது நட்பு.

கலைஞர்

நண்பனைத் தீயவழி சென்று கெட்டுவிடாமல் தடுத்து, அவனை நல்வழியில் நடக்கச் செய்து, அவனுக்குத் தீங்கு வருங்காலத்தில் அந்தத் தீங்கின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதே உண்மையான நட்பாகும்.

பரிமேலழகர்

அழிவினவை நீக்கி ஆறு உய்த்து - கேட்டினைத்தரும் தீநெறிகளைச் செல்லுங்கால் விலக்கி, ஏனை நன்னெறிகளைச் செல்லாக்காற் செலுத்தி; அழிவின்கண் அல்லல் உழப்பது நட்பாம் - தெய்வத்தால் கேடு வந்துழி அது விலக்கப்படாமையின் அத்துன்பத்தை உடன் அனுபவிப்பதே ஒருவனுக்கு நட்பாவது. ('ஆறு' என வருகின்றமையின், 'அழிவினைத் தருமவை' என்றொழிந்தார். 'தெருண்ட அறிவினவர'(நாலடி.301) என்புழிப்போல இன்சாரியை நிற்க இரண்டனுருபு தொக்கது. இனி, 'நவை' என்று பாடம் ஓதி, அதற்குப் போர் அழிவினும் செல்வ அழிவினும் வந்த துன்பங்கள் என்றும், 'அழிவின்கண்' என்பதற்கு யாக்கை அழிவின்கண் என்றும் உரைப்பாரும் உளர்.)

புலியூர்க் கேசிகன்

நண்பனுக்கு அழிவு வரும்போது அதை விலக்கி, அவனை நிலைபெறச் செய்து, தன்னையும் மீறிய அழிவின் போது தானும் அவனோடு துயரப்படுவதே நல்ல நட்பாகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)நட்பு (Natpu)