குறள் (Kural) - 780

குறள் (Kural) 780
குறள் #780
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து.

பொருள்
தன்னைக் காத்த தலைவனுடைய கண்களில் நீர் பெருகுமாறு வீரமரணம் அடைந்தால், அத்தகைய மரணத்தை யாசித்தாவது பெற்றுக் கொள்வதில் பெருமை உண்டு.

Tamil Transliteration
Purandhaarkan Neermalkach Chaakirpin Saakkaatu
Irandhukol Thakkadhu Utaiththu.

மு.வரதராசனார்

தம்மைக் காத்த தலைவருடைய கண்கள் நீர் பெருக்குமாறு சாகப் பெற்றால், சாவு இரந்தாவது பெற்றுக் கொள்ளத் தக்க பெருமை உடையதாகும்.

சாலமன் பாப்பையா

வீரர்களின் வீரச்செயலை எல்லாம் எண்ணிப் பார்க்கும் கண்களோடு ஆட்சியாளர் நிற்க, அந்தப்போரில் சாகும் வாய்ப்பைப் பெற்றவரின் சாவு, பிறரிடம் கேட்டுப் பெறத்தக்க சிறப்பினை உடையது.

கலைஞர்

தன்னைக் காத்த தலைவனுடைய கண்களில் நீர் பெருகுமாறு வீரமரணம் அடைந்தால், அத்தகைய மரணத்தை யாசித்தாவது பெற்றுக் கொள்வதில் பெருமை உண்டு.

பரிமேலழகர்

புரந்தார்கண் நீர் மல்கச் சாகிற்பின் - தமக்குச் செய்த நன்றிகளை நினைந்து ஆண்ட அரசர் கண்கள் நீர்மல்கும் வகை போரிடைச் சாவப் பெறின்; சாக்காடு இரந்துகோள்தக்கது உடைத்து - அச்சாக்காடு இரந்தாயினும் கொள்ளுந் தகுதியை உடைத்து. (மல்குதலாகிய இடத்து நிகழ்பொருளின் தொழில், இடத்தின் மேல் நின்றது. கிளை அழ இல்லிடை நோயால் விளியார் பழவினைப் பயனே யெய்தலின், அடுத்த வினையால் துறக்கமெய்தும் சாதலை 'இரந்துகோள் தக்கது உடைத்து' என்றார். இவை நான்கு பாட்டானும் உயிர் ஓம்பாமை கூறப்பட்டது.)

புலியூர்க் கேசிகன்

தம்மைப் பேணியவரின் கண்கள் நீர் சிந்தும்படியாகக் களத்தில் சாவைத் தழுவினால், அத்தகைய சாவு ஒருவன் இரந்தும் கொள்ளத்தகுந்த சிறப்பினை உடையதாகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)படையியல் (Padaiyil)
அதிகாரம் (Adhigaram)படைச் செருக்கு (Pataichcherukku)