குறள் (Kural) - 778
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர்.
பொருள்
தலைவன் சினந்தாலும் சிறப்புக் குறையாமல் கடமை ஆற்றுபவர்கள்தான், போர்களத்தில் உயிரைப் பற்றிக் கலங்காத வீர மறவர்கள் எனப் போற்றப்படுவர்.
Tamil Transliteration
Urinuyir Anjaa Maravar Iraivan
Serinum Seerkundral Ilar.
மு.வரதராசனார்
போர்வந்தால் உயிரின் பொருட்டு அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர், அரசன் சினந்தாலும் தம்முடைய சிறப்புக் குன்றாதவர் ஆவர்.
சாலமன் பாப்பையா
போர் வந்தால் தம் உயிர்க்கு அஞ்சாது செல்லும் வீரர், அப்போரை வேண்டா என்று அரசு சினந்து தடுத்தாலும், தம் வீரத்தில் குறைய மாட்டார்.
கலைஞர்
தலைவன் சினந்தாலும் சிறப்புக் குறையாமல் கடமை ஆற்றுபவர்கள்தான், போர்களத்தில் உயிரைப் பற்றிக் கலங்காத வீர மறவர்கள் எனப் போற்றப்படுவர்.
பரிமேலழகர்
உறின் உயிர் அஞ்சா மறவர் - போர்பெறின் தம்முயிர்ப் பொருட்டு அஞ்சாது அதன்மேற் செல்லும் வீரர்; இறைவன் செறினும் சீர்குன்றல் இலர் - தம் இறைவன் அது வேண்டா என்று முனியினும் அவ் வீரமிகுதி குன்றார். (போர் பெற்று அறியாமையின், அது பெற்றால் அரசன் தடுப்பினும் நில்லார் என்பதாம். பிறரும் 'போரெனிற்புகலும் புனைகழல் மறவர்'(புறநா.31) என்றும்,'புட்பகைக்கு ஏவானாகலின் சாவேம் யாம் என நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்ப'(புறநா.68) என்றும் கூறினார்.)
புலியூர்க் கேசிகன்
போர்க்களத்திலே தம் உயிருக்கும் அஞ்சாமல் போரிடும் படை மறவர்கள், தம் அரசனே தடுத்தாலும், தம் மனவூக்கத்தில் சிறிதும் குறைய மாட்டார்கள்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | படையியல் (Padaiyil) |
அதிகாரம் (Adhigaram) | படைச் செருக்கு (Pataichcherukku) |