குறள் (Kural) - 754
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.
பொருள்
தீய வழியை மேற்கொண்டு திரட்டப்படாத செல்வம்தான் ஒருவருக்கு அறநெறியை எடுத்துக்காட்டி, அவருக்கு இன்பத்தையும் தரும்.
Tamil Transliteration
Araneenum Inpamum Eenum Thiranarindhu
Theedhindri Vandha Porul.
மு.வரதராசனார்
சேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல், சேர்க்கப் பட்டுவந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும் கொடுக்கும்.
சாலமன் பாப்பையா
நேரிய வழிகை அறிந்து, தீமை ஏதும் செய்யாமல் சம்பாதிக்கப்பட்ட பணம் அறத்தையும் தரம்; இன்பத்தையும் தரும்.
கலைஞர்
தீய வழியை மேற்கொண்டு திரட்டப்படாத செல்வம்தான் ஒருவருக்கு அறநெறியை எடுத்துக்காட்டி, அவருக்கு இன்பத்தையும் தரும்.
பரிமேலழகர்
திறன் அறிந்து தீது இன்றி வந்த பொருள் - செய்யும் திறத்தினை அறிந்து அரசன் கொடுங்கோன்மையிலனாக உளதாய பொருள்; அறன் ஈனும் இன்பமும் ஈனும் - அவனுக்கு அறத்தையும் கொடுக்கும், இன்பத்தையும் கொடுக்கும். (செய்யுந்திறம்: தான் பொருள் செய்தற்கு உரிய நெறி. 'இலனாக' என்றது 'இன்றி' எனத் திரிந்து நின்றது. 'செங்கோல்' என்று புகழப்படுதலானும், கடவுட்பூசை தானங்களாற் பயனெய்தலானும், 'அறன் ஈனும்' என்றும், நெடுங்காலம் நின்று துய்க்கப்படுதலான், 'இன்பமும் ஈனும்' என்றும் கூறினார். அதனான் அத்திறத்தான் ஈட்டுக என்பதாம்.)
புலியூர்க் கேசிகன்
தீய வழிகளால் அல்லாமல், பொருள் தேடும் திறனை அறிந்து தேடியதனால் வந்தடைந்த செல்வமானது, அறவாழ்க்கையையும், இன்பத்தையும் ஒருங்கே கொடுப்பது ஆகும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | கூழியல் (Koozhiyal) |
அதிகாரம் (Adhigaram) | பொருள் செயல்வகை (Porulseyalvakai) |