குறள் (Kural) - 753

குறள் (Kural) 753
குறள் #753
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.

பொருள்
பொருள் என்னும் அணையா விளக்கு மட்டும் கையில் இருந்துவிட்டால் நினைத்த இடத்துக்குச் சென்று இருள் என்னும் துன்பத்தைத் துரத்தி விட முடிகிறது.

Tamil Transliteration
Porulennum Poiyaa Vilakkam Irularukkum
Enniya Theyaththuch Chendru.

மு.வரதராசனார்

பொருள் என்று சொல்லப்படுகின்ற நந்தா விளக்கு, நினைத்த இடத்திற்குச் சென்று உள்ள இடையூற்றைக் கெடுக்கும்.

சாலமன் பாப்பையா

பணம் எனப்படும் அணையா விளக்கு அயல்நாட்டிற்குள்ளும் சென்று பகையாகிய இருளைப் போக்கும்.

கலைஞர்

பொருள் என்னும் அணையா விளக்கு மட்டும் கையில் இருந்துவிட்டால் நினைத்த இடத்துக்குச் சென்று இருள் என்னும் துன்பத்தைத் துரத்தி விட முடிகிறது.

பரிமேலழகர்

பொருள் என்னும் பொய்யா விளக்கம் - பொருள் என்று எல்லாரானும் சிறப்பிக்கப்படும் நந்தா விளக்கு; எண்ணிய தேயத்துச் சென்று இருள் அறுக்கும் - தன்னைச் செய்தவர்க்கு அவர் நினைத்த தேயத்துச் சென்று பகை என்னும் இருளைக் கெடுக்கும். (எல்லார்க்கும் எஞ்ஞான்றும் இன்றியமையாததாய் வருதல் பற்றி. 'பொய்யா விளக்கம்' என்றும், ஏனைய விளக்கோடு இதனிடை வேற்றுமை தோன்ற 'எண்ணிய தேயத்துச் சென்று' என்றும் கூறினார். ஏகதேச உருவகம். இவை மூன்று பாட்டானும் பொருளது சிறப்புக் கூறப்பட்டது.

புலியூர்க் கேசிகன்

‘பொருள்’ என்னும் நந்தா விளக்கமானது, தன்னை உடையவர் எண்ணிய தேயங்களுக்கும் சென்று, அவர் பகையாகிய இருளைப் போக்கும் வல்லமை உடையதாகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)கூழியல் (Koozhiyal)
அதிகாரம் (Adhigaram)பொருள் செயல்வகை (Porulseyalvakai)