குறள் (Kural) - 750
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.
பொருள்
கோட்டைக்குத் தேவையான எல்லாவித சிறப்புகளும் இருந்தாலும்கூட உள்ளிருந்து செயல்படுவோர் திறமையற்றவர்களாக இருந்தால் எந்தப் பயனும் கிடையாது.
Tamil Transliteration
Enaimaatchith Thaakiyak Kannum Vinaimaatchi
Illaarkan Illadhu Aran.
மு.வரதராசனார்
எத்தகைய பெருமையை உடையதாக இருந்த போதிலும், செயல்வகையால் சிறப்பு இல்லாதவரரிடத்தில் அரண் பயனில்லாததாகும். பொருள் செயல்வகை.
சாலமன் பாப்பையா
எத்தனை சிறப்புகளை உடையது என்றாலும் வெல்லும் பகை அறிந்து செயல்படும் திறம் இல்லாதவர் இருந்தால், அரண் இருந்தும் இல்லாததே ஆகும்.
கலைஞர்
கோட்டைக்குத் தேவையான எல்லாவித சிறப்புகளும் இருந்தாலும்கூட உள்ளிருந்து செயல்படுவோர் திறமையற்றவர்களாக இருந்தால் எந்தப் பயனும் கிடையாது.
பரிமேலழகர்
அரண் - அரண்; எனை ஆகியக்கண்ணும் - மேற்சொல்லப்பட்ட மாட்சியெல்லாம் உடைத்தாயவிடத்தும்; வினை மாட்சி இல்லார்கண் இல்லது - வினை செய்தற்கண் மாட்சி இல்லாதார் மாட்டு அவையிலதாம்.(வாளா இருத்தலும், அளவறியாது செய்தலும், ஏலாதது செய்தலும் எல்லாம் அடங்க, 'வினைமாட்சியில்லார்' என்றும், ஏற்ற வினையை அளவறிந்து செய்து காவாக்கால் அம்மாட்சிகளால் பயனின்றி அழியுமென்பார், 'அவையுடைத்தன்று' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் காப்பாரை இன்றியமையாதென்பது கூறப்பட்டது.)
புலியூர்க் கேசிகன்
எத்தகைய பாதுகாவலை உடையதாய் இருந்தாலும், அரண்காக்கும் மறவர்கள் போர்வினைச் சிறப்பு இல்லாதவரானால், அந்த அரணும் பயனற்று அழிந்து போகும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அரணியல் (Araniyal) |
அதிகாரம் (Adhigaram) | அரண் (Aran) |