குறள் (Kural) - 749

குறள் (Kural) 749
குறள் #749
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்.

பொருள்
போர் முனையில் பகைவரை வீழ்த்துமளவுக்கு உள்nயிருந்து கொண்டே தாக்குதல் நடத்தும் வண்ணம் தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்வதே அரண் ஆகும்.

Tamil Transliteration
Munaimukaththu Maatralar Saaya Vinaimukaththu
Veereydhi Maanta Tharan.

மு.வரதராசனார்

போர் முனையில் பகைவர் அழியும் படியாக (உள்ளிருந்தவர்செய்யும்) போர்ச் செயல்வகையால் பெருமைப் பெற்றுச் சிறப்புடையதாய் விளங்குவது அரண் ஆகும்.

சாலமன் பாப்பையா

போர் தொடங்கிய உடனே பகைவர் அழியும்படி உள்ளிருப்போர் செய்யும் போர்த்திறத்தால் சிறந்த விளங்குவதே அரண்.

கலைஞர்

போர் முனையில் பகைவரை வீழ்த்துமளவுக்கு உள்ளே இருந்து கொண்டே தாக்குதல் நடத்தும் வண்ணம் தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்வதே அரண் ஆகும்.

பரிமேலழகர்

முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறு எய்தி - போர் தொடங்கின அளவிலே பகைவர் கெடும் வண்ணம் அகத்தோர் செய்யும் வினை வேறுபாடுகளான் வீறு பெற்று; மாண்டது அரண் - மற்றும் வேண்டும் மாட்சியையுடையதே அரணாவது. (தொடக்கத்திற் கெட்டார் பின்னுங் கூடிப்பொருதல் கூடாமையின், 'முனைமுகத்துச் சாய' என்றார். வினை வேறுபாடுகளாவன: பகைவர் தொடங்கிய போரினை அறிந்து எய்தல், எறிதல், குத்துதல், வெட்டுதல், என்றிவை முதலாய வினைகளுள், அதனைச் சாய்ப்பன செய்தல். 'மற்றும் வேண்டும் மாட்சி' யென்றது, புறத்தோர் அறியாமற் புகுதல் போதல் செய்தற்குக் கண்ட சுருங்கை வழி முதலாயின உடைமை.)

புலியூர்க் கேசிகன்

முற்றுகையிட்ட பகைவர்கள் போர்முனையின் முகப்பிலேயே அழிந்து போகுமாறு, போர்த்தொழிலில் வீறுபெற்றுச் சிறந்த காவல் மறவர்களையும் கொண்டதே அரண்!

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரணியல் (Araniyal)
அதிகாரம் (Adhigaram)அரண் (Aran)