குறள் (Kural) - 740
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.
பொருள்
நல்ல அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்களும் இருந்தாலும் எந்தப் பயனும் இல்லாமற் போகும்.
Tamil Transliteration
Aangamai Veydhiyak Kannum Payamindre
Vendhamai Villaadha Naatu.
மு.வரதராசனார்
நல்ல அரசன் பொருந்தாத நாடு, மேற்சொன்ன நன்மைகள் எல்லாம் அமைதிருந்த போதிலும் அவற்றால் பயன் இல்லாமல் போகும்.
சாலமன் பாப்பையா
மேலே சொல்லப்பட்ட எல்லாம் இருந்தாலும் குடிமக்கள் மீது அன்பு இல்லாத அரசு அமைந்துவிட்டால் அதனால் ஒரு நன்மையும் இல்லை.
கலைஞர்
நல்ல அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்களும் இருந்தாலும் எந்தப் பயனும் இல்லாமற் போகும்.
பரிமேலழகர்
வேந்து அமைவு இல்லாத நாடு - வேந்தனோடு மேவுதல் இல்லாத நாடு; ஆங்கு அமைவு எய்தியக் கண்ணும் பயம் இன்றே - மேற்சொல்லிய குணங்கள் எல்லாவற்றினும் நிறைந்திருந்ததாயினும், அவற்றால் பயனுடைத்தன்று.(வேந்து அமைவு எனவே, குடிகள் அவன்மாட்டு அன்புடையராதலும்,அவன்தான் இவர்மாட்டு அருளுடையனாதலும் அடங்கின. அவைஇல்வழி வாழ்வோர் இன்மையின், அவற்றால் பயனின்றாயிற்று. இவைஇரண்டு பாட்டானும் அதன் குற்றம் கூறப்பட்டது.)
புலியூர்க் கேசிகன்
மேற்சொல்லியவை எல்லாம் சிறப்பாகவே அமையப் பெற்றிருந்தாலும், ஆட்சி நடத்தும் வேந்தன் பொருத்தமில்லாமலிருக்கும் நாடு, பயனற்ற நாடு ஆகும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அரணியல் (Araniyal) |
அதிகாரம் (Adhigaram) | நாடு (Naatu) |