குறள் (Kural) - 739

குறள் (Kural) 739
குறள் #739
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.

பொருள்
இடைவிடாமல் முயற்சி மேற்கொண்டு வளம் பெறும் நாடுகளைவிட, இயற்கையிலேயே எல்லா வளங்களையும் உடைய நாடுகள் சிறந்த நாடுகளாகும்.

Tamil Transliteration
Naatenpa Naataa Valaththana Naatalla
Naata Valandharu Naatu.

மு.வரதராசனார்

முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடிமுயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல.

சாலமன் பாப்பையா

தன் மக்கள் சிரமப்படாமல் இருக்க அதிக உற்பத்தியைத் தருவதே நாடு என்று நூலோர் கூறுவர்; தேடிவருந்திப் பெறும் நிலையில் இருப்பது நாடு அன்று.

கலைஞர்

இடைவிடாமல் முயற்சி மேற்கொண்டு வளம் பெறும் நாடுகளைவிட, இயற்கையிலேயே எல்லா வளங்களையும் உடைய நாடுகள் சிறந்த நாடுகளாகும்.

பரிமேலழகர்

நாடா வளத்தன நாடு என்ப - தங்கண் வாழ்வார் தேடி வருந்தாமல் அவர்பால் தானே அடையும் செல்வத்தை உடையவற்றை நூலோர் நாடு என்று சொல்வர்; நாடவளம் தரும் நாடு நாடு அல்ல - ஆதலால் தேடி வருந்தச் செல்வம் அடைவிக்கும் நாடுகள் நாடாகா. (நாடுதல், இரு வழியும் வருத்தத்தின்மேல் நின்றது. 'பொருள் செய்வார்க்கும் அஃது இடம்' (சிந்.நாம.48) என்றார் பிறரும். நூலோர் விதிபற்றி எதிர்மறை முகத்தான் குற்றம் கூறியவாறு. இவ்வாறன்றி, 'என்ப' என்பதனைப் பின்னும் கூட்டி இருபொருள்பட உரைப்பின், அனுவாதமாம்.)

புலியூர்க் கேசிகன்

வேற்று நாடுகளை எதற்கும் வேண்டாதபடி, எல்லா வளமும் கொண்டதே நல்ல நாடு என்பர்; பிறர் உதவியை நாடி அதனால் வளமை வரும் நாடு, நாடே ஆகாது

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரணியல் (Araniyal)
அதிகாரம் (Adhigaram)நாடு (Naatu)