குறள் (Kural) - 730

உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்.
பொருள்
தாம் கற்றவைகளைக் கேட்போரைக் கவரும் வண்ணம் கூற இயலாமல் அவைக்கு அஞ்சுவோர், உயிரோடு இருந்தாலும்கூட இறந்தவருக்குச் சமமானவராகவே கருதப்படுவார்கள்.
Tamil Transliteration
Ulareninum Illaarotu Oppar Kalananjik
Katra Selachchollaa Thaar.
மு.வரதராசனார்
அவைக்களத்திற்கு அஞ்சித் தாம் கற்றவைகளைக் (கேட்பவர் மனத்தில்) பதியுமாறு சொல்ல முடியாதவர், உயிரோடு வாழ்ந்தலும் இறந்தவர்க்கு ஒப்பாவர்.
சாலமன் பாப்பையா
அவையைப் பார்த்துப் பயந்து, படித்தவற்றை அவைக்கு ஏற்பச் சொல்லத் தெரியாதவர், வாழ்ந்தாலும் வாழாதவர்க்குச் சமமே.
கலைஞர்
தாம் கற்றவைகளைக் கேட்போரைக் கவரும் வண்ணம் கூற இயலாமல் அவைக்கு அஞ்சுவோர், உயிரோடு இருந்தாலும்கூட இறந்தவருக்குச் சமமானவராகவே கருதப்படுவார்கள்.
பரிமேலழகர்
களன் அஞ்சிக் கற்ற செலச் சொல்லாதார் - அவைக்களத்தை அஞ்சித் தாம் கற்றவற்றை அதற்கு ஏற்கச் சொல்ல மாட்டாதார்; உளர் எனினும் இல்லாரொடு ஒப்பர் - உயிர் வாழ்கின்றாராயினும் உலகத்தாரால் எண்ணப்படாமையின் இறந்தாரோடு ஒப்பர்.(ஈண்டுக் 'களன்' என்றது ஆண்டிருந்தாரை. இவை ஐந்து பாட்டானும் அவைஅஞ்சுவாரது இழிவு கூறப்பட்டது.)
புலியூர்க் கேசிகன்
அவைக்கு அச்சமடைந்து, தாம் கற்றவற்றை அவையினர் ஏற்கும் வண்ணம் சொல்ல முடியாதவர்கள், அறிவுள்ளவரே என்றாலும், அறிவற்றவர்களுக்கே சமமாவார்கள்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அமைச்சியல் (Amaichiyal) |
அதிகாரம் (Adhigaram) | அவை அஞ்சாமை (Avaiyanjaamai) |