குறள் (Kural) - 718

குறள் (Kural) 718
குறள் #718
உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று.

பொருள்
உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவர்களின் முன்னிலையில் பேசுதல், வளரக்கூடிய பயிர் உள்ள பாத்தியில் நீர் பாய்ச்சுவது போலப் பயன் விளைக்கும்.

Tamil Transliteration
Unarva Thutaiyaarmun Sollal Valarvadhan
Paaththiyul Neersorin Thatru.

மு.வரதராசனார்

தாமே உணர்கின்ற தன்மை உடையவரின் முன் கற்றவர் பேசுதல், தானே வளரும் பயிருள்ள பாத்தியில் நீரைச் சொரிந்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா

பிறர் சொல்லாமலேயே தாமே பலவற்றையும் அறிந்து கொள்ளும் அறிவுத் திறம் உடையவர் கூடியுள்ள அவையில் பேசுவது வளரும் பயிர் நிற்கும் பாத்தியில் நீரினைப் பாய்ச்சியது போலாம்.

கலைஞர்

உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவர்களின் முன்னிலையில் பேசுதல், வளரக்கூடிய பயிர் உள்ள பாத்தியில் நீர் பாய்ச்சுவது போலப் பயன் விளைக்கும்.

பரிமேலழகர்

உணர்வது உடையார்முன் சொல்லல் - பிறர் உணர்த்தலின்றிப் பொருள்களைத் தாமே உணரவல்ல அறிவினை உடையவர் அவைக்கண் கற்றார் ஒன்றனைச் சொல்லுதல்; வளர்வதன் பாத்தியுள் நீர் சொரிந்தற்று - தானே வளர்வதொரு பயிர் நின்ற பாத்திக்கண் நீரினைச் சொரிந்தாற்போலும். (தானேயும் வளர்தற்குரிய கல்வி மிக வளரும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும், ஒத்தார் அவைக்கண் எவ்வழியும் சொல்லுக என்பது கூறப்பட்டது.)

புலியூர்க் கேசிகன்

சொல்லின் பயனை உணர்கின்றவர்களின் முன்பாக ஒன்றைச் சொல்லுதல், நல்ல பயிர் வளருகின்ற பாத்தியினுள்ளே, நீர் சொரிந்தாற் போலப் பெரும்பயன் தருவதாகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அமைச்சியல் (Amaichiyal)
அதிகாரம் (Adhigaram)அவை அறிதல் (Avaiyaridhal)