குறள் (Kural) - 711

குறள் (Kural) 711
குறள் #711
அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.

பொருள்
ஒவ்வொரு சொல்லின் தன்மையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள்.

Tamil Transliteration
Avaiyarinadhu Aaraaindhu Solluka Sollin
Thokaiyarindha Thooimai Yavar.

மு.வரதராசனார்

சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் தன்மை அறிந்து ஏற்றச் சொற்களை ஆராய்ந்து சொல்ல வேண்டும்.

சாலமன் பாப்பையா

செஞ்சொல் பொருள் வெளிப்படையான சொல் தாய் இலக்கணச் சொல்.(வெளிப்படையான பொருளை விட்டுவிட்டு வேறொன்றை உணர்த்தும் சொல் ஊர் தூங்குகிறது) குறிப்புச் சொல் வெளிப்படையான பொருளை விட்டுவிட்டுக் குறிப்பால் வேறொரு பொருள் தருவது பொன்காக்கும் பூதம் அவன்) ஆகிய சொற்களின் கூட்டத்தை அறிந்த மனத்தூய்மையை உடையவர். தமக்கும் மேலான கல்வியாளர் கூடியிருக்கும் அவை. சமமானவர் அவை. குறைவான கல்வியாளர் அவை என அவற்றின் தரம் அறிந்து அங்கே பேசும் திறத்தை ஆராய்ந்து பேசுக.

கலைஞர்

ஒவ்வொரு சொல்லின் தன்மையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள்.

பரிமேலழகர்

சொல்லின் தொகை அறிந்த தூய்மையவர் - சொல்லின் குழுவினை அறிந்த தூய்மையினையுடையார்; அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக - தாமொன்று சொல்லுங்கால் அப்பொழுதை அவையினை அறிந்து ஆராய்ந்து சொல்லுக. (சொல்லின் குழுவெனவே, செஞ்சொல், இலக்கணச் சொல், குறிப்புச் சொல் என்னும் மூவகைச் சொல்லும் அடங்கின. தூய்மை: அவற்றுள் தமக்காகாதன ஒழித்து ஆவன கோடல். அவை என்றது ஈண்டு அதன் அளவை. அது மிகுதி, ஒப்பு, தாழ்வு என மூவகைத்து. அறிதல். தம்மொடு தூக்கி அறிதல். ஆராய்தல்: இவ்வவைக்கண் சொல்லும் காரியம் இது, சொல்லுமாறு இது, சொன்னால் அதன் முடிவு இது என்று, இவை உள்ளிட்டன ஆராய்தல்.)

புலியூர்க் கேசிகன்

சொல்லின் தொகையை அறிந்த தூய அறிவாளர்கள், அவையின் தன்மையை அறிந்து, தாம் சொல்லப் போவதையும் நன்றாக ஆராய்ந்தே, எதனையும் சொல்ல வேண்டும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அமைச்சியல் (Amaichiyal)
அதிகாரம் (Adhigaram)அவை அறிதல் (Avaiyaridhal)