குறள் (Kural) - 7

குறள் (Kural) 7
குறள் #7
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

பொருள்
ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.

Tamil Transliteration
Thanakkuvamai Illaadhaan Thaalserndhaark Kallaal
Manakkavalai Maatral Aridhu.

மு.வரதராசனார்

தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.

சாலமன் பாப்பையா

தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்.

கலைஞர்

ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.

பரிமேலழகர்

தனக்கு உவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் - ஒருவாற்றானும் தனக்கு நிகர் இல்லாதவனது தாளைச் சேர்ந்தார்க்கு அல்லது; மனக்கவலை மாற்றல் அரிது - மனத்தின்கண் நிகழும் துன்பங்களை நீக்குதல் உண்டாகாது. ("உறற்பால தீண்டா விடுதலரிது" (நாலடி.109) என்றாற் போல, ஈண்டு 'அருமை' இன்மைமேல் நின்றது. தாள் சேராதார் பிறவிக்கு ஏது ஆகிய காம வெகுளி மயக்கங்களை மாற்றமாட்டாமையின், பிறந்து இறந்து அவற்றான் வரும் துன்பங்களுள் அழுந்துவர் என்பதாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

தனக்கு உவமை இல்லாதான் - ஒருவகையாலும் தனக்கு ஒப்பில்லாத இறைவனுடைய; தாள் சேர்ந்தார்க்கல்லால் - திருவடிகளை யடைந்தார்க்கல்லாமல்; மனக்கவலை மாற்றல் அரிது - மனத்தின்கண் நிகழுந்துன்பங்களையும் அவற்றாள் ஏற்படும் கவலையையும் நீக்குதல் இயலாது. இம்மைக்கும் மறுமைக்கும் உரிய எல்லாப் பொருள்களையும் நலங்களையும், எல்லார்க்கும் என்றும் வரையாதளிக்கக்கூடிய வள்ளல் இறைவன் ஒருவனேயாதலின், அவனையடைந்தார்க்கல்லது துன்பமுங் கவலையும் நீங்காவென்பதாம். அருமைச் சொல்லிற்குரிய சின்மை இன்மையென்னும் இரு பொருள்களுள், இங்கு வந்துள்ளது இன்மை.

மணக்குடவர்

பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர், இறைவனது அடியைச் சேர்ந்தவர்; சேராதவ ரதனு ளழுந்துவார்.

புலியூர்க் கேசிகன்

தனக்கு யாதொன்றும் ஒப்புமை இல்லாதவனின் திருவடிகளைச் சேர்ந்தார்க்கு அல்லாமல், பிறர்க்கு, மனக்கவலையை மாற்றுதல் அரிதாகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)பாயிரவியல் (Paayiraviyal)
அதிகாரம் (Adhigaram)கடவுள் வாழ்த்து (Katavul Vaazhththu)