குறள் (Kural) - 696
குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்.
பொருள்
ஒருவரின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து, தக்க காலத்தைத் தேர்ந்தெடுத்து, வெறுப்புக்குரியவைகளை விலக்கி, விரும்பத் தக்கதை மட்டுமே, அவர் விரும்பும் வண்ணம் சொல்ல வேண்டும்.
Tamil Transliteration
Kuripparindhu Kaalang Karudhi Veruppila
Ventupa Vetpach Cholal.
மு.வரதராசனார்
அரசருடையக் குறிப்பை அறிந்து தக்கக் காலத்தை எதிர்நோக்கி, வெறுப்பில்லாதவற்றையும் விருப்பமானவற்றையும் அவர் விரும்புமாறுச் சொல்ல வேண்டும்.
சாலமன் பாப்பையா
ஆட்சியாளருக்கு எதையேனும் சொல்ல விரும்பினால், ஆட்சியாளரின் அப்போதைய மனநிலையை அறிந்து தான் சொல்லக் கருதிய செய்திக்கு ஏற்ற சமயத்தையும் எண்ணி ஆட்சியாளருக்கு வெறுப்புத் தராததும், வேண்டியதும் ஆகிய காரியத்தை அவர் விரும்புமாறு சொல்லுக.
கலைஞர்
ஒருவரின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து, தக்க காலத்தைத் தேர்ந்தெடுத்து, வெறுப்புக்குரியவைகளை விலக்கி, விரும்பத் தக்கதை மட்டுமே, அவர் விரும்பும் வண்ணம் சொல்ல வேண்டும்.
பரிமேலழகர்
குறிப்பு அறிந்து - அரசனுக்குக் காரியஞ் சொல்லுங்கால் அப்பொழுது நிகழ்கி்ன்ற அவன் குறிப்பினை அறிந்து; காலம் கருதி- சொல்லுதற்கு ஏற்ற காலத்தையும் நோக்கி; வெறுப்பு இலவேண்டுப வேட்பச் சொலல் - வெறுப்பிலவுமாய் வேண்டுவனவுமாய காரியங்களை அவன் விரும்பும் வகை சொல்லுக. (குறிப்புக் காரியத்தின்கண் அன்றிக் காம வெகுளியுள்ளிட்டவற்றின் நிகழ்வுழியும் அதற்கு ஏலாக் காலத்தும் சொல்லுதல் பயனின்றாகலின் 'குறிப்பு அறிந்து காலம் கருதி' என்றும், அவன் உடம்படாதன முடிவு போகாமையின் 'வெறுப்பில' என்றும், பயனிலவும் பயன் சுருங்கியவும் செய்தல் வேணடாமையின் 'வேண்டுப' என்றும், அவற்றை இனியவாய்ச் சுருங்கி விளங்கிய பொருளவாய சொற்களால் சொல்லுக என்பார் 'வேட்பச் சொலல்' என்றும் கூறினார்.)
புலியூர்க் கேசிகன்
அரசனது உள்ளக்குறிப்பை அறிந்து, காலத்தையும் கருத்திற் கொண்டு, அரசனுக்கு வெறுப்புத்தராத சொற்களை, அவன் விரும்பிக் கேட்கும்படி சொல்ல வேண்டும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அமைச்சியல் (Amaichiyal) |
அதிகாரம் (Adhigaram) | மன்னரைச் சேர்ந்து ஒழுகல் (Mannaraich Cherndhozhudhal) |