குறள் (Kural) - 694

குறள் (Kural) 694
குறள் #694
செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து.

பொருள்
ஆற்றல் வாய்ந்த பெரியவர்கள் முன்னே, மற்றவர்கள் காதுக்குள் பேசுவதையும், அவர்களுடன் சேர்ந்து சிரிப்பதையும் தவிர்த்து, அடக்கமெனும் பண்பைக் காத்திடல் வேண்டும்.

Tamil Transliteration
Sevichchollum Serndha Nakaiyum Aviththozhukal
Aandra Periyaa Rakaththu.

மு.வரதராசனார்

வல்லமை அமைந்த பெரியாரிடத்தில் (மற்றொருவன்) செவியை நெருங்கிச் சொல்லுதல் உடன் சேர்ந்து நகைத்தலும் செய்யாமல் ஒழுகவேண்டும்.

சாலமன் பாப்பையா

மேன்மை மிக்க பெரியவர் அருகே இருக்கும்போது, பிறருடன் காதருகே மெல்லப் பேசுவதையும் அடுத்தவர் முகம் பார்த்துக் கண்சிமிட்டிச் சிரிப்பதையும் செய்யாது நடந்துகொள்க.

கலைஞர்

ஆற்றல் வாய்ந்த பெரியவர்கள் முன்னே, மற்றவர்கள் காதுக்குள் பேசுவதையும், அவர்களுடன் சேர்ந்து சிரிப்பதையும் தவிர்த்து, அடக்கமெனும் பண்பைக் காத்திடல் வேண்டும்.

பரிமேலழகர்

ஆன்ற பெரியாரகத்து - அமைந்த அரசர் அருகு இருந்தால்; செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்து ஒழுகல் - அவர் காண ஒருவன் செவிக்கண் சொல்லுதலையும் ஒருவன் முகம் நோக்கி நகுதலையும் தவிர்த்து ஒழுகுக. (சேர்தல்: பிறனொடு சேர்தல். செய்தொழுகின், தம் குற்றம் கண்டு செய்தனவாகக் கொள்வர் என்பது கருத்து.)

புலியூர்க் கேசிகன்

அறிவாற்றலில் சிறந்த பெரியவர்கள் கூடியுள்ள அரசவையில் இருக்கும் போது, காதோடு காதாகப் பேசுவதையும், பிறரோடு சேர்ந்து சிரிப்பதையும், நீக்கிவிட வேண்டும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அமைச்சியல் (Amaichiyal)
அதிகாரம் (Adhigaram)மன்னரைச் சேர்ந்து ஒழுகல் (Mannaraich Cherndhozhudhal)