குறள் (Kural) - 692

குறள் (Kural) 692
குறள் #692
மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கந் தரும்.

பொருள்
மன்னர் விரும்புகின்றவைகளைத் தமக்கு வேண்டுமெனத் தாமும் விரும்பாமலிருத்தால் அவர்க்கு அந்த மன்னர் வாயிலாக நிலையான ஆக்கத்தை அளிக்கும்.

Tamil Transliteration
Mannar Vizhaipa Vizhaiyaamai Mannaraal
Manniya Aakkan Tharum.

மு.வரதராசனார்

அரசர் விரும்புகின்றவர்களைத் தாம் விரும்பாமலிருத்தல் (அரசரைச் சார்ந்திருப்பவர்க்கு) அரசரால் நிலையான ஆக்கத்தைப் பெற்றுத் தரும்.

சாலமன் பாப்பையா

ஆட்சியாளருடன் பழகுபவர் ஆட்சியாளர் எவற்றை விரும்புகிறாரோ அவற்றை விரும்பாமல் இருப்பது, அவருக்கு ஆட்சியாளரால் நிலைத்த செல்வத்தைக் கொடுக்கும்.

கலைஞர்

மன்னர் விரும்புகின்றவைகளைத் தமக்கு வேண்டுமெனத் தாமும் விரும்பாமலிருத்தால் அவர்க்கு அந்த மன்னர் வாயிலாக நிலையான ஆக்கத்தை அளிக்கும்.

பரிமேலழகர்

மன்னர் விழைப விழையாமை - தம்மால் சேரப்பட்ட மன்னர் விரும்புவனவற்றைத் தாம் விரும்பாதொழிதல்; மன்னரான் மன்னிய ஆக்கம் தரும் - அமைச்சர்க்கு அவரானே நிலைபெற்ற செல்வத்தைக் கொடுக்கும். (ஈண்டு 'விழைப' என்றது அவர்க்குச் சிறப்பாக உரியவற்றை. அவை: நுகரப்படுவன, ஒப்பனை, மேன்மை என்றிவை முதலாயின. இவற்றை ஒப்பிற்கு அஞ்சித் தாம் விழையா தொழியவே, அவ்வச்சம் நோக்கி உவந்து,அவர்தாமே எல்லாச் செல்வமும் நல்குவார் என்பது கருத்து. எனவே, அவற்றை விரும்பின் கேடு தரும் என்பதாம்.)

புலியூர்க் கேசிகன்

மன்னர் விரும்புகின்ற பொருள்களைத் தானும் விரும்பாதிருக்கும் தன்மையானது, அம்மன்னராலே நிலைத்திருக்கும் செல்வங்களை ஒருவனுக்குத் தருவதாக விளங்கும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அமைச்சியல் (Amaichiyal)
அதிகாரம் (Adhigaram)மன்னரைச் சேர்ந்து ஒழுகல் (Mannaraich Cherndhozhudhal)