குறள் (Kural) - 690
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது.
பொருள்
தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும், அதை எண்ணிப் பயந்து விடாமல் உறுதியுடன் கடமையாற்றுகிறவனே தன்னுடைய தலைவனுக்கு நம்பிக்கையான தூதனாவான்.
Tamil Transliteration
Irudhi Payappinum Enjaadhu Iraivarku
Urudhi Payappadhaam Thoodhu.
மு.வரதராசனார்
தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும் அதற்காக அஞ்சி விட்டுவிடாமல், தன் அரசனுக்கு நன்மை உண்டாகுமாறு செய்கின்றவனே தூதன்.
சாலமன் பாப்பையா
தம் அரசு சொல்லி அனுப்பிய செய்தியை அடுத்த அரசிடம் சொல்லும்போது தம் உயிருக்கே ஆபத்து நேர்ந்தாலும் அஞ்சாமல் தம் அரசிற்கு நன்மை தேடித்தருபவரே நல்ல தூதர்.
கலைஞர்
தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும், அதை எண்ணிப் பயந்து விடாமல் உறுதியுடன் கடமையாற்றுகிறவனே தன்னுடைய தலைவனுக்கு நம்பிக்கையான தூதனாவான்.
பரிமேலழகர்
இறுதி பயப்பினும் எஞ்சாது - அவ்வார்த்தை தன் உயிர்க்கு இறுதி தருமாயினும் அதற்கு அஞ்சியொழியாது; இறைவற்கு உறுதி பயப்பது தூதாம் - தன் அரசன் சொல்லியவாறே அவனுக்கு மிகுதியை வேற்றரசரிடைச் சொல்லுவானே தூதனாவான். ('இறுதி பயப்பினும்' என்றதனால், ஏனைய பயத்தல் சொல்ல வேண்டாவாயிற்று. இவை மூன்று பாட்டானும் கூறியது கூறுவானது இலக்கணம் கூறப்பட்டது.)
புலியூர்க் கேசிகன்
தன் உயிருக்கே முடிவைத் தந்தாலும், அதற்கு அஞ்சித் தன் கடமையிலே குறைவுபடாது; தன் வேந்தனுக்கு நன்மை தரும் உறுதிப்பாட்டை செய்து முடிப்பவனே தூதன்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அமைச்சியல் (Amaichiyal) |
அதிகாரம் (Adhigaram) | தூது (Thoodhu) |