குறள் (Kural) - 688

குறள் (Kural) 688
குறள் #688
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு.

பொருள்
துணிவு, துணை, தூய ஒழுக்கம் ஆகிய இம்மூன்றும் தூதுவர்க்குத் தேவையானவைகளாகும்.

Tamil Transliteration
Thooimai Thunaimai Thunivutaimai Immoondrin
Vaaimai Vazhiyuraippaan Panpu.

மு.வரதராசனார்

தூய ஒழுக்கம் உடையவனாதல், துணை உடையவனாதல், துணிவு உடையவனாதல் இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்.

சாலமன் பாப்பையா

பணத்தின் மீதும் அயல் பெண்கள் மீதும் ஆசை இல்லாமல் இருக்கும் நேர்மை, அடுத்த அரசின் அமைச்சர்களின் துணை, நல்லனவே எண்ணிச் செய்யும் துணிவு இம் மூன்றையும் உண்மையாகவே பெற்றிருப்பதே கூறியது கூறும் தூதரின் பண்பு.

கலைஞர்

துணிவு, துணை, தூய ஒழுக்கம் ஆகிய இம்மூன்றும் தூதுவர்க்குத் தேவையானவைகளாகும்.

பரிமேலழகர்

வழி உரைப்பான் பண்பு - தன் அரசன் வார்த்தையை அவன் சொல்லியவாறே வேற்றரசர்க்குச் சென்று சொல்வானது இலக்கணமாவன; தூய்மை - பொருள் காமங்களால் தூயனாதலும்; துணைமை - தமக்கு அவரமைச்சர் துணையாந் தன்மையும்; துணிவுடைமை - துணிதலுடைமையும்; இம்மூன்றன் வாய்மை - இம்மூன்றோடு கூடிய மெய்ம்மையும் என இவை. (பொருள் காமங்கள் பற்றி வேறுபடக் கூறாமைப் பொருட்டுத் தூய்மையும், தன் அரசனுக்கு உயர்ச்சி கூறிய வழி 'எம்மனோர்க்கு அஃது இயல்பு' எனக்கூறி, அவர் வெகுளி நீக்குதற் பொருட்டுத் துணைமையும், 'இது சொல்லின் இவர் ஏதஞ்செய்வர்' என்று ஒழியாமைப் பொருட்டுத் துணிவுடைமையும் , யாவரானும் தேறப்படுதற் பொருட்டு மெய்ம்மையும் வேண்டப்பட்டன. 'இன்' ஒடுவின் பொருட்கண் வந்தது.)

புலியூர்க் கேசிகன்

நடத்தையிலே தூய்மையும், தக்க துணைவரை உடைமையும், மனத்திலே துணிவு உடைமையும் ஆகிய இம்மூன்றினையும் வாய்த்திருப்பவனாக விளங்குதலே தூதனின் பண்பு

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அமைச்சியல் (Amaichiyal)
அதிகாரம் (Adhigaram)தூது (Thoodhu)