குறள் (Kural) - 681
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.
பொருள்
அன்பான குணமும், புகழ்வாய்ந்த குடிப்பிறப்பும், அரசினர் பாராட்டக்கூடிய நல்ல பண்பாடும் பெற்றிருப்பதே தூதருக்குரிய தகுதிகளாகும்.
Tamil Transliteration
Anputaimai Aandra Kutippiraththal Vendhavaam
Panputaimai Thoodhuraippaan Panpu.
மு.வரதராசனார்
அன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய இவை தூது உரைப்பவனுடையத் தகுதிகள்.
சாலமன் பாப்பையா
நாட்டு மக்கள், அரசு, உறவு இவற்றின் மீது அன்பும், நற்குணம் நிறைந்த குடிப்பிறப்பும், அரசு விரும்பும் பண்பும் கொண்டிருப்பவரே தூதர்.
கலைஞர்
அன்பான குணமும், புகழ்வாய்ந்த குடிப்பிறப்பும், அரசினர் பாராட்டக்கூடிய நல்ல பண்பாடும் பெற்றிருப்பதே தூதருக்குரிய தகுதிகளாகும்.
பரிமேலழகர்
அன்பு உடைமை - தன் சுற்றத்தார்மாட்டு அன்புடையனாதலும்; ஆன்ற குடிப்பிறத்தல் - அமைச்சுப் பூணற்கு அமைந்த குடியின்கண் பிறத்தலும்; வேந்து அவாம் பண்பு உடைமை - அரசர் சாதி விரும்பும் பண்புடையன் ஆதலும்; தூது உரைப்பான் பண்பு - தூது வார்த்தை சொல்வானுக்கு இலக்கணம். (முன்னைய இரண்டனாலும், முறையே சுற்றத்தார்க்கும் தீங்கு வாராமல் தான் பேணியொழுகலும், தன் முன்னோர் தூதியல் கேட்டறிதலும் பெற்றாம், வேந்து அவாம் பண்பு உடைமை முன்னர் மன்னரைச் சோந்தொழுகற்கண் பெறப்படும். அதனால் வேற்றரசரும் அவன் வயத்தராதல் பெறுதும்.)
புலியூர்க் கேசிகன்
தன் நாட்டின் மீது அன்பும், உயர்ந்த குடிப்பிறப்பும், வேந்தன் விரும்புகின்ற உயர்ந்த பண்புகள் அமைதலும் தூது உரைப்பவனுக்கு வேண்டிய பண்புகள்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அமைச்சியல் (Amaichiyal) |
அதிகாரம் (Adhigaram) | தூது (Thoodhu) |