குறள் (Kural) - 677
செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல்.
பொருள்
ஒரு செயலில் ஈடுபடுகிறவன், அச்செயல் குறித்து முழுமையாக உணர்ந்தவனின் கருத்தினை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.
Tamil Transliteration
Seyvinai Seyvaan Seyanmurai Avvinai
Ullarivaan Ullam Kolal.
மு.வரதராசனார்
செயலைச் செய்கின்றவன் செய்ய வேண்டிய முறை, அச் செயலின் உண்மையான இயல்பை அறிந்தவனுடையக் கருத்தைத் தான் ஏற்றுக் கொள்ளவதாகும்.
சாலமன் பாப்பையா
ஒரு செயலைச் செய்யத் தொடங்குபவன் அதைச் செய்யும் முறையாவது, அச்செயலை இதற்கு முன்பு செய்திருப்பவனின் கருத்தை அறிந்து கொள்வதேயாகும்.
கலைஞர்
ஒரு செயலில் ஈ.டுபடுகிறவன், அச்செயல் குறித்து முழுமையாக உணர்ந்தவனின் கருத்தினை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.
பரிமேலழகர்
செய்வினை செய்வான் செயன் முறை - அவ்வாற்றால் செய்யப்படும் வினையைத் தொடங்கினான் செய்யும் முறைமையாவது; அவ்வினை உள் அறிவான் உள்ளம் கொளல்- அவனது உளப்பாட்டினை அறிவான் கருத்தினைத் தான் அறிதல். ('அவ்வாறு' என்றது, பொருள் முதலிய எண்ணலையும் முடிவு முதலிய தூக்கலையும். உள் அறிவான் - முன் செய்து போந்தவன். அவன் கருத்து: அவன் செய்து போந்த உபாயம். அதனையறியவே தானும் அதனால் செய்து பயன் எய்தும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் ஒப்பான் செய்யுந் திறம் கூறப்பட்டது.)
புலியூர்க் கேசிகன்
ஒரு செயலைச் செய்வதற்குரிய செயல்முறையாவது, அதனை முன்பே செய்து முடித்துத் தெளிந்தவனிடம் கேட்டறிந்து, அவைகளைத் தாமும் மேற்கொள்ளுதல் ஆகும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அமைச்சியல் (Amaichiyal) |
அதிகாரம் (Adhigaram) | வினை செயல்வகை (Vinaiseyalvakai) |