குறள் (Kural) - 675

குறள் (Kural) 675
குறள் #675
பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.

பொருள்
ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்பு, அதற்குத் தேவையான பொருள், ஏற்ற கருவி, காலம், மேற்கொள்ளப் போகும் செயல்முறை, உகந்த இடம் ஆகிய ஐந்தையும் குறையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

Tamil Transliteration
Porulkaruvi Kaalam Vinaiyitanotu Aindhum
Iruldheera Ennich Cheyal.

மு.வரதராசனார்

வேண்டிய பொருள், ஏற்றக்கருவி, தக்க காலம், மேற்கொண்ட தொழில், உரிய இடம் ஆகிய ஐந்தினையும் மயக்கம் தீர எண்ணிச் செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா

ஒரு செயலைச் செய்யத் தொடங்கும்போது தனக்கும் தன் எதிரிக்கும் இருக்கும் செல்வம், சாதனங்கள், ஏற்ற காலம், செயல்திறம், பொருத்தமான இடம் ஆகிய ஐந்தையும் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் சிந்தித்துச் செய்க.

கலைஞர்

ஒரு காரியத்தில் ஈ.டுபடுவதற்கு முன்பு, அதற்குத் தேவையான பொருள், ஏற்ற கருவி, காலம், மேற்கொள்ளப் போகும் செயல்முறை, உகந்த இடம் ஆகிய ஐந்தையும் குறையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பரிமேலழகர்

பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும் - வினைசெய்யுமிடத்துப் பொருளும் கருவியும் காலமும் வினையும் இடனுமாகிய இவ்வைந்தனையும்; இருள் தீர எண்ணிச் செயல் - மயக்கம் அற எண்ணிச் செய்க. (எண்ணொடு, பிறவழியும் கூட்டப்பட்டது. பொருள் - அழியும் பொருளும் ஆகும் பொருளும். கருவி-தன்தானையும் மாற்றார் தானையும். காலம் - தனக்கு ஆகுங் காலமும் அவர்க்கு ஆகுங் காலமும். வினை - தான் வல்ல வினையும் அவர் வல்ல வினையும். இடம் - தான் வெல்லும் இடமும் அவர் வெல்லும் இடமும். இவற்றைத் தான் வெற்றியெய்தும் திறத்தில் பிழையாமல் எண்ணிச் செய்க என்பதாம்.)

புலியூர்க் கேசிகன்

வேண்டிய பொருள், கருவிகள், தக்க காலம், செயலறிவு, உரிய இடம் என்னும் ஐந்தையும் மயக்கமில்லாமல் ஆராய்ந்து கொண்ட பின்னரே, செய்தல் வேண்டும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அமைச்சியல் (Amaichiyal)
அதிகாரம் (Adhigaram)வினை செயல்வகை (Vinaiseyalvakai)