குறள் (Kural) - 669

குறள் (Kural) 669
குறள் #669
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.

பொருள்
இன்பம் தரக்கூடிய செயல் என்பது, துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக் கூடியதேயாகும்.

Tamil Transliteration
Thunpam Uravarinum Seyka Thunivaatri
Inpam Payakkum Vinai.

மு.வரதராசனார்

(முடிவில்) இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும் போது துன்பம் மிக வந்த போதிலும் துணிவு மேற்கொண்டு செய்து முடிக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா

ஒரு செயலைச் செய்யும்போது துன்பம் அதிகமாக வந்தாலும் முடிவில் இன்பம் தரும் அச்செயலை மனம் தளராமல் செய்க.

கலைஞர்

இன்பம் தரக்கூடிய செயல் என்பது, துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக் கூடியதேயாகும்.

பரிமேலழகர்

துன்பம் உறவரினும் - முதற்கண் மெய்ம்முயற்சியால் தமக்குத் துன்பம் மிக வருமாயினும்; இன்பம் பயக்கும் வினை துணிவு ஆற்றிச் செய்க - அது நோக்கித் தளராது முடிவின்கண் இன்பம் பயக்கும் வினையைத் திட்பமுடையராய்ச் செய்க.(துணிவு - கலங்காமை. அஃதுடையார்க்கு அல்லது கணிகமாய முயற்சித்துன்பம் நோக்காது நிலையுதலுடைய பரிணாமஇன்பத்தை நோக்கிச் செய்தல் கூடாமையின், 'துணிவாற்றிச்செய்க' என்றார். இவை இரண்டு பாட்டானும் அவர் வினைசெய்யுமாறு கூறப்பட்டது.)

புலியூர்க் கேசிகன்

முதலிலே வருகின்ற துன்பங்களால் வருத்தம் அடைய நேர்ந்தாலும், முடிவிலே இன்பம் தருகின்ற செயல்களை மனத்துணிவுடனே செய்து முடிக்க வேண்டும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அமைச்சியல் (Amaichiyal)
அதிகாரம் (Adhigaram)வினைத்திட்பம் (Vinaiththitpam)