குறள் (Kural) - 644

குறள் (Kural) 644
குறள் #644
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல்.

பொருள்
காரணத்தைத் தெளிவாக அறிந்து ஒன்றைச் சொல்ல வேண்டும் அந்தச் சொல் வன்மையைப் போன்ற அறமும், உண்மைப் பொருளும் வேறெதுவும் இல்லை.

Tamil Transliteration
Thiranarindhu Solluka Sollai Aranum
Porulum Adhaninooungu Il.

மு.வரதராசனார்

சொல்லின் திறத்தை அறிந்து சொல்லை வழங்க வேண்டும், அத் தகைய சொல்வன்மையை விடச் சிறந்த அறமும் பொருளும் இல்லை.

சாலமன் பாப்பையா

எவரிடம் பேசகிறோமோ அவர் குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், செல்வம், தோற்றம், வயது ஆகிய தகுதிகளை அறிந்து பேச்சு; அப்படிப் பேசுவதைவிட உயர்ந்த அறமும் பொருளும் வேறு இல்லை.

கலைஞர்

காரணத்தைத் தெளிவாக அறிந்து ஒன்றைச் சொல்ல வேண்டும். அந்தச் சொல் வன்மையைப் போன்ற அறமும், உண்மைப் பொருளும் வேறெதுவும் இல்லை.

பரிமேலழகர்

சொல்லைத் திறன் அறிந்து சொல்லுக - அப்பெற்றித்தாய சொல்லை, அமைச்சர் தம்முடையவும், கேட்பாருடையவுமாய திறங்களை அறிந்து சொல்லுக; அதனின் ஊங்கு அறனும் பொருளும் இல் - அங்ஙனம் சொல்லுதற்கு மேற்பட்ட அறனும் பொருளும் இல்லையாகலான். (அத்திறங்களாவன: குடிப்பிறப்பு , கல்வி, ஒழுக்கம், செல்வம், உருவம், பருவம் என்பவற்றான் வரும் தகுதி வேறுபாடுகள். அவற்றை அறிந்து சொல்லுதலாவது, அவற்றால் தமக்கும் அவர்க்கும் உளவாய ஏற்றத்தாழ்வுகளை அறிந்து அவ்வம் மரபாற் சொல்லுதல். அஃது உலகத்தோடு ஒட்ட ஒழுகலையும் இனிமையையும் பயத்தலின் அறனாயிற்று. தம் காரியம் முடித்தலின் பொருளாயிற்று. அறனும் பொருளும் எனக் காரணத்தைக் காரியமாக்கிக் கூறினார்.)

புலியூர்க் கேசிகன்

கேட்பவரது மனப்பான்மையை அறிந்தே எந்தச் சொல்லையும் சொல்லவேண்டும்; அப்படிச் சொல்வதை விட மேலான அறமும் பொருளும் யாதும் இல்லை

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அமைச்சியல் (Amaichiyal)
அதிகாரம் (Adhigaram)சொல்வன்மை (Solvanmai)