குறள் (Kural) - 642

குறள் (Kural) 642
குறள் #642
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.

பொருள்
ஆக்கமும் அழிவும் சொல்லால் ஏற்படும் என்பதால், எந்தவொரு சொல்லிலும் குறைபாடு நேராமல் கவனமாக இருக்க வேண்டும்.

Tamil Transliteration
Aakkamung Ketum Adhanaal Varudhalaal
Kaaththompal Sollinkat Sorvu.

மு.வரதராசனார்

ஆக்கமும் கேடும் சொல்லுகின்ற சொல்லால் வருவதால் ஒருவன் தன்னுடைய சொல்லிற்க்கு தவறு நேராமல் காத்துக்கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா

அவரவர் சொல் திறந்தாலேயே நன்மையும், தீமையும் வருவதால், பேசும் பேச்சில் பிழை வராமல் விழிப்புடன் பேசுக.

கலைஞர்

ஆக்கமும் அழிவும் சொல்லால் ஏற்படும் என்பதால், எந்தவொரு சொல்லிலும் குறைபாடு நேராமல் கவனமாக இருக்க வேண்டும்.

பரிமேலழகர்

ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் - தம் அரசர்க்கும் அங்கங்கட்கும் ஆக்க அழிவுகள் தம் சொல்லான் வரும் ஆகலான்; சொல்லின்கண் சோர்வு காத்து ஓம்பல் - அப்பெற்றித்தாய சொல்லின்கண் சோர்தலை அமைச்சர் தம்கண் நிகழாமல் போற்றிக் காக்க. (ஆக்கத்திற்கு ஏதுவாய நற்சொல்லையும் கேட்டிற்கு ஏதுவாய தீச்சொல்லையும், சொல்லாதல் ஒப்புமைபற்றி 'அதனால்' என்றார். செய்யுள் ஆகலின் சுட்டுப் பெயர் முன் வந்தது. பிறர் சோர்வு போலாது உயிர்கட்கு எல்லாம் ஒருங்கு வருதலால், 'காத்து ஓம்பல்' என்றார். இவை இரண்டு பாட்டானும் இஃது இவர்க்கு இன்றியமையாதது என்பது கூறப்பட்டது.)

புலியூர்க் கேசிகன்

மேன்மையும் கெடுதியும் பேச்சினாலேயே வருவதனால் சொல்லிலே சோர்வு உண்டாகாதபடி எப்போதும் ஒருவன் தன்னைக் காத்துப் பேணி வருதல் வேண்டும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அமைச்சியல் (Amaichiyal)
அதிகாரம் (Adhigaram)சொல்வன்மை (Solvanmai)