குறள் (Kural) - 638

குறள் (Kural) 638
குறள் #638
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.

பொருள்
சொன்னதையும் கேட்காமல், சொந்த அறிவும் இல்லாமல் இருப்போர்க்கு, அருகிலுள்ள அமைச்சர்கள்தான் துணிவோடு நல்ல யோசனைகளைக் கூற வேண்டும்.

Tamil Transliteration
Arikondru Ariyaan Eninum Urudhi
Uzhaiyirundhaan Kooral Katan.

மு.வரதராசனார்

அறிவுறுத்துவாரின் அறிவையையும் அழித்துத் தானும் அறியாதவனாக அரசன் இருந்தாலும், அமைச்சன் அவனுக்கு உறுதியானவற்றை எடுத்துக்கூறல் க‌டமையாகும்.

சாலமன் பாப்பையா

அறிந்து சொல்பவர் அறிவையும் மதியாமல், செய்யவேண்டிய வழிகளைத் தாமும் தெரியாமல், ஆட்சியாளர் இருந்தால், அக்குற்றம் கண்டு கோபம் கொள்ளாமல், அஞ்சாமல், அவருக்கு நன்மை தருவதைக் கூற வேண்டியது அமைச்சர் கடமையாகும்.

கலைஞர்

சொன்னதையும் கேட்காமல், சொந்த அறிவும் இல்லாமல் இருப்போர்க்கு, அருகிலுள்ள அமைச்சர்கள்தான் துணிவோடு நல்ல யோசனைகளைக் கூற வேண்டும்.

பரிமேலழகர்

அறி கொன்று அறியான் எனினும் - அறிந்து சொல்லியாரது அறிவையும் அழித்து அரசன் தானும் அறியானே ஆயினும்; உறுதி கூறல் உழையிருந்தான் கடன் - அக்குற்றம் நோக்கி ஒழியாது, அவனுக்கு உறுதியாயின கூறுதல் அமைச்சனுக்கு முறைமை. ('அறி' என்பது முதனிலைத் தொழிற்பெயர். கோறல் - தான் கொள்ளாமை மேலும் இகழ்ந்து கூறுதல். 'உழையிருந்தான்' எனப்பெயர் கொடுத்தார், 'அமாத்தியர்' என்னும் வடமொழிப் பெயர்க்கும் பொருண்மை அதுவாகலின். உறுதி கூறாக்கால், அவனது இறுதி எய்தல் குற்றத்தை உலகம் தன்மேல் ஏற்றும் என்பார். 'கூறல் கடன்' என்றார். இவை இரண்டு பாட்டானும் அவர் செயல் கூறப்பட்டது.)

புலியூர்க் கேசிகன்

அறிந்து சொல்பவரின் அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளாமல், தானும் அறிவில்லாதவனான அரசனானாலும், அவனுக்கும் உறுதி கூறுதல் அமைச்சரது கடமையாகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அமைச்சியல் (Amaichiyal)
அதிகாரம் (Adhigaram)அமைச்சு (Amaichchu)