குறள் (Kural) - 636

குறள் (Kural) 636
குறள் #636
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை.

பொருள்
நூலறிவுடன் இயற்கையான மதி நுட்பமும் உள்ளவர்களுக்கு முன்னால் எந்த சூழ்ச்சிதான் எதிர்த்து நிற்க முடியும்? முடியாது.

Tamil Transliteration
Madhinutpam Noolotu Utaiyaarkku Adhinutpam
Yaavula Munnir Pavai.

மு.வரதராசனார்

இயற்கையான நுட்ப அறிவை நூலறிவோடு ஒருங்கே உடையவர்க்கு மிக்க நுட்பமான சூழ்ச்சிகளாய் முன் நிற்பவை எவை உள்ளன.

சாலமன் பாப்பையா

இயல்பான நுண்ணறிவோடு செயற்கை ஆகிய நூல் அறிவையும் உடைய அமைச்சருக்கு எதிராக, மிகுந்த நுட்பமான சூழ்ச்சிகள் என்று எவை நிற்கமுடியும்?.

கலைஞர்

நூலறிவுடன் இயற்கையான மதி நுட்பமும் உள்ளவர்களுக்கு முன்னால் எந்த சூழ்ச்சிதான் எதிர்த்து நிற்க முடியும்? முடியாது.

பரிமேலழகர்

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு - இயற்கையாகிய நுண்ணறிவைச் செயற்கை ஆகிய நூலறிவோடு உடையவராய அமைச்சர்க்கு; அதி நுட்பம் முன் நிற்பவை யாஉள - மிக்க நுட்பத்தையுடைய சூழ்ச்சிகளாய் முன்நிற்பன யாவையுள? ('மதி நுட்பம்' என்பது பின்மொழி நிலையல்,அது தெய்வம் தர வேண்டுதலின் முன்கூறப்பட்டது. 'நூல்' என்பதூஉம், 'அதிநுட்பம்' என்பதூஉம் ஆகுபெயர். 'அதி' என்பது வடசொல்லுள் மிகுதிப் பொருளதோர் இடைச்சொல், அது திரிந்து நுட்பம் என்பதனோடு தொக்கது. 'முன் நிற்றல்' மாற்றார் சூழ்ச்சியாயின தம் சூழ்ச்சியால் அழியாது நிற்றல். இனி 'அதினுட்பம்' என்று பாடம் ஓதி, 'அதனின் நுட்பம் யா' என்று உரைப்பாரும் உளர். அவர் சூழ்ச்சிக்கு இனமாய் முன் சுட்டப்படுவது ஒன்றில்லாமையும், சுட்டுப்பெயர் ஐந்தாம் உருபு ஏற்றவழி அவ்வாறு நில்லாமையும் அறிந்திலர். பகைவர் சூழ்வனவற்றைத் தாம் அறிந்து அழித்து, அவர் அறிந்து அழியாதன தாம் சூழ்வர் என்பது கருத்து. இதனான் அவரது சிறப்புக் கூறப்பட்டது.)

புலியூர்க் கேசிகன்

இயல்பான நுண்ணறிவும், அதனோடு சேர்ந்த நூலறிவும் உடையவரான அமைச்சர்களின் எதிராக, எந்த நுட்பமான சூழ்ச்சிகளும் நிற்கமுடியாமல் போய்விடும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அமைச்சியல் (Amaichiyal)
அதிகாரம் (Adhigaram)அமைச்சு (Amaichchu)