குறள் (Kural) - 634

குறள் (Kural) 634
குறள் #634
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு.

பொருள்
ஒரு செயலைத் தேர்ந்தெடுத்தாலும், அதனை நிறைவேற்றிட வழிவகைகளை ஆராய்ந்து ஈடுபடுதலும், முடிவு எதுவாயினும் அதனை உறுதிபடச் சொல்லும் ஆற்றல் படைத்திருத்தலும் அமைச்சருக்குரிய சிறப்பாகும்.

Tamil Transliteration
Theridhalum Therndhu Seyalum Orudhalaiyaach
Chollalum Valladhu Amaichchu.

மு.வரதராசனார்

(செய்யத்தக்க செயலை) ஆராய்தலும், அதற்குரிய வழிகளை ஆராய்ந்து செய்தலும், துணிவாகக் கருத்தைச் சொல்லுதலும் வல்லவன் அமைச்சன்.

சாலமன் பாப்பையா

ஒரு செயலைப் பற்றி பலவகையிலும் ஆராய்ந்து அறிதல், வாய்ப்பு வரும்போது ஆராய்ந்தபடி செய்தல், நன்மை தருவனவற்றையே உறுதியாகச் சொல்லுதல் என்னும் இவற்றில் வல்லவரே அமைச்சர்.

கலைஞர்

ஒரு செயலைத் தேர்ந்தெடுத்தாலும், அதனை நிறைவேற்றிட வழிவகைகளை ஆராய்ந்து ஈ.டுபடுதலும், முடிவு எதுவாயினும் அதனை உறுதிபடச் சொல்லும் ஆற்றல் படைத்திருத்தலும் அமைச்சருக்குரிய சிறப்பாகும்.

பரிமேலழகர்

தெரிதலும் - ஒருகாரியச் செய்கை பலவாற்றால் தோன்றின் அவற்றுள் ஆவது ஆராய்ந்தறிதலும்; தேர்ந்து செயலும் - அது செய்யுங்கால் வாய்க்கும் திறன் நாடிச் செய்தலும்; ஒருதலையாச் சொல்லுதலும் - சிலரைப் பிரித்தல் பொருத்தல் செயற்கண், அவர்க்கு இதுவே செயற்பாலது என்று துணிவு பிறக்கும் வகை சொல்லுதலும்; வல்லது அமைச்சு - வல்லவனே அமைச்சனாவான். (தெரிதல், செயன் மேலதாயிற்று. வருகின்றது அதுவாகலின்.

புலியூர்க் கேசிகன்

எதனையும் நன்கு ஆராய்ந்து அறிதலும், ஆராய்ந்த பின்பே செய்தலும், எதனையும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் சொல்லுதலும் வல்லவனே, நல்ல அமைச்சன்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அமைச்சியல் (Amaichiyal)
அதிகாரம் (Adhigaram)அமைச்சு (Amaichchu)