குறள் (Kural) - 626

குறள் (Kural) 626
குறள் #626
அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர்.

பொருள்
இத்தனை வளத்தையும் பெற்றுள்ளோமே யென்று மகிழந்து அதைக் காத்திட வேண்டுமென்று கருதாதவர்கள் அந்த வளத்தை இழக்க நேரிடும் போது மட்டும் அதற்காகத் துவண்டு போய் விடுவார்களா?.

Tamil Transliteration
Atremendru Allar Patupavo Petremendru
Ompudhal Thetraa Thavar.

மு.வரதராசனார்

செல்வம் வந்த போது இதைப்பெற்றோமே என்று பற்றுக்கொண்டு காத்தறியாதவர் வறுமை வந்த போது இழந்தோமே என்று அல்லல்படுவரோ.

சாலமன் பாப்பையா

பணம் இருந்த காலத்தில் மனக்கஞ்சம் இல்லாமல் பிறர்க்கு வழங்கியவர், இல்லாத காலத்தில் வரும் துன்பத்தினால் ஏழையாகி விட்டோமே என்று வருந்துவாரோ?.

கலைஞர்

இத்தனை வளத்தையும் பெற்றுள்ளோமே யென்று மகிழந்து அதைக் காத்திட வேண்டுமென்று கருதாதவர்கள் அந்த வளத்தை இழக்க நேரிடும் போது மட்டும் அதற்காகத் துவண்டு போய் விடுவார்களா?.

பரிமேலழகர்

அற்றேம் என்று அல்லற்படுபவோ - வறுமைக்காலத்து யாம் வறியமாயினேம் என்று மனத்தால் துயருழப்பாரோ; பெற்றேம் என்று ஓம்புதல் தேற்றாதவர் - செல்வக்காலத்து இது பெற்றேம் என்று இவறுதலை யறியாதார்? (பெற்றவழி இவறாமை நோக்கி அற்றவழியும் அப்பகுதி விடாது ஆகலின், அல்லற்பாடு இல்லையாயிற்று, இதனான் பொருளின்மையான் ஆயதற்கு அழியாமையும் அதற்கு உபாயமும் கூறப்பட்டன.)

புலியூர்க் கேசிகன்

‘பொருள் அடைந்தோம்’ என்று அதனைப் போற்றிக் காப்பதற்கு அறியாதவர்கள், வறுமைக் காலத்தில் ‘பொருளை இழந்தோம்’ என்று துன்பம் அடைவாரோ?

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)இடுக்கண் அழியாமை (Itukkan Azhiyaamai)