குறள் (Kural) - 621
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்.
பொருள்
சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது, அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான்.
Tamil Transliteration
Itukkan Varungaal Nakuka Adhanai
Atuththoorvadhu Aqdhoppa Thil.
மு.வரதராசனார்
துன்பம் வரும்போது (அதற்காக கலங்காமல்) நகுதல் வேண்டும், அத் துன்பத்தை எதிர்த்து வெல்லவல்லது அதைப் போன்றது வேறு இல்லை.
சாலமன் பாப்பையா
நாம் அறியாமலே நமக்கு ஒரு துன்பம் வந்தால் அப்போது மனம் தளராமல் மனத்துள் மகிழ்க; அந்தத் துன்பத்தைத் தோற்கடிக்க அம்மகிழ்ச்சியைப் போல் ஆற்றல் மிக்கது வேறொன்றும் இல்லை.
கலைஞர்
சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது, அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான்.
பரிமேலழகர்
இடுக்கண் வருங்கால் நகுக - ஒருவன் வினையால் தனக்கு இடுக்கண் வருமிடத்து, அதற்கு அழியாது உளமகிழ்க; அதனை அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல் - அவ்விடுக்கணை மேன்மேல் அடர வல்லது அம் மகிழ்ச்சி போல்வது பிறிதில்லையாகலான். (வினை இனிது முடிந்துழி நிகழற்பாலதாய மகிழ்ச்சியை, அதற்கு இடையே இடுக்கண் வருவழிச் செய்யவே, அவன் அழிவின்றி, மன எழுச்சியான், 'அதனைத் தள்ளி அக்குறை முடிக்கும் ஆற்றலுடையனாம்' ஆகலின், 'அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல்' என்றார்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
இடுக்கண் வருங்கால் நகுக-ஒருவன் வினையாற்றும் போது இடையில் தடைபோலத் துன்பம் வரின் அதற்கு வருந்தாது அதை எள்ளி நகையாடுக; அதனை அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல்-அதனை மேன்மேல் நெருங்கி மேற்கொள்வதற்கு அது போன்ற வழி வேறொன்றுமில்லை. வினை வெற்றிக்கு அஞ்சாமையொடு கூடிய மனவுறுதி இன்றியமையாததாதலின், எதிர்த்து வரும் பகைவனை எள்ளி நகையாடுவது போன்றே வினைக்கு இடையூறாக வரும் துன்பத்தையும் பொருட் படுத்தற்க என்பார் 'நகுக' என்றார். அதனால் முயற்சிக்குத் தடையின்மையால், வினை வெற்றியாக முடியும் என்பதாம். அடுத்தூர்தல் என்பது, ஓர் அடங்காக் குதிரையை நெருங்கி யேறி யடக்குதல் போல்வதாம்.
மணக்குடவர்
தனக்குத் துன்பம் வந்த காலத்தும் நகுக: அத்துன்பத்தை மேன்மேலும் அடர்க்க வல்லது அந்நகுதல் போல்வது பிறிதில்லை. இஃது இடுக்கணுக்கு அழியாமை வேண்டுமென்றது.
புலியூர்க் கேசிகன்
துன்பங்கள் வரும் போது, மனம் தளராமல், நகைத்து ஒதுக்குக; துன்பங்களைக் கடப்பதற்கு அதனை விடச் சிறந்த வழி வேறு எதுவும் இல்லை
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அரசியல் (Arasiyal) |
அதிகாரம் (Adhigaram) | இடுக்கண் அழியாமை (Itukkan Azhiyaamai) |