குறள் (Kural) - 58

குறள் (Kural) 58
குறள் #58
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.

பொருள்
நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ் சிறப்பாக அமையும்.

Tamil Transliteration
Petraar Perinperuvar Pentir Perunjirappup
Puththelir Vaazhum Ulaku.

மு.வரதராசனார்

கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர்.

சாலமன் பாப்பையா

பெண்கள் இத்தனை சிறப்புகளையும் பெறுவார்கள் என்றால் தேவர்கள் வாழும் உலகில் மிகுந்த மேன்மையை அடைவார்கள்.

கலைஞர்

நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ் சிறப்பாக அமையும்.

பரிமேலழகர்

பெண்டிர் பெற்றான் பெறின் - பெண்டிர் தம்மை எய்திய கணவனை வழிபடுதல் பெறுவராயின்; புத்தேளிர் வாழும் உலகு பெருஞ்சிறப்புப் பெறுவர் - புத்தேளிர் வாழும் உலகின் கண் அவரால் பெருஞ்சிறப்பினைப் பெறுவர். (வழிபடுதல் என்பது சொல்லெச்சம். இதனால் தற்கொண்டாற் பேணிய மகளிர் புத்தேளிரால் பேணப்படுவர் என்பது கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

பெண்டிர் பெற்றாற் பெறின் - பெண்டிர் தம் கணவனுக்குத் தொண்டு செய்தலைப் பெறுவாராயின்; புத்தேளிர் வாழும் உலகு பெருஞ் சிறப்புப் பெறுவர் - தேவர் வாழும் உலகின்கண் அவராற் பெருஞ்சிறப்புச்செய்யப் பெறுவர். தொண்டுசெய்தல் என்பது சொல்லெச்சம். கொண்டானைப் பேணும் பெண்டிர் மண்ணுலகத்தில் மட்டுமன்றி விண்ணுலகத்திலும் சிறப்படைவர் என்பது இதனாற் கூறப்பட்டது.

மணக்குடவர்

பெண்டிரானவர் தம்மை மனைவியராகப் பெற்றவரையே தமக்குத் தலைவராகப் பெறின் தேவர் வாழும் பெரிய சிறப்பினையுடைய உலகத்தைப் பெறுவர்.

புலியூர்க் கேசிகன்

பெண்கள் கணவரைப் போற்றித் தம் கடமைகளையும் செய்வாரானால், பெரும் சிறப்புடைய புத்தேளிர் வாழும் உலகினைப் பெறுவார்கள்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)வாழ்க்கைத் துணைநலம் (Vaazhkkaith Thunainalam)