குறள் (Kural) - 57

குறள் (Kural) 57
குறள் #57
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.

பொருள்
தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்.

Tamil Transliteration
Siraikaakkum Kaappevan Seyyum Makalir
Niraikaakkum Kaappe Thalai.

மு.வரதராசனார்

மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்பு முறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தான் காக்கும் கற்பே சிறிந்தது.

சாலமன் பாப்பையா

இத்தனை குணங்களும் இருக்கும்படி பெண்ணைச் சிறை வைத்துக் காவல் காப்பதில் பயன் என்ன? பெண்கள் தங்களைத் தாங்களே மன அடக்கத்தால் காக்கும் காவலே முதன்மையானது.

கலைஞர்

தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்.

பரிமேலழகர்

மகளிர் சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் - மகளிரைத் தலைவர் சிறையால் காக்கும் காவல் என்ன பயனைச் செய்யும்? நிறை காக்கும் காப்பே தலை - அவர் தமது நிறையால் காக்கும் காவலே தலையாய காவல். (சிறை : மதிலும், வாயில்காவலும் முதலாயின. நிறை: நெஞ்சைக் கற்பு நெறியில் நிறுத்தல். காவல் இரண்டினும் நிறைக் காவல் இல்வழி ஏனைச் சிறைக்காவலால் பயன் இல்லை என்பார், 'நிறைகாக்கும் காப்பே தலை' என்றார். ஏகாரம் பிரிநிலைக் கண் வந்தது. இதனால் தற்காத்தற் சிறப்புக் கூறப்பட்டது.

ஞா.தேவநேயப் பாவாணர்

சிறைகாக்குங் காப்பு எவன் செய்யும்-பெண்டிரைக் கணவர் சிறைச்சாலையுள் அடைத்துவைத்தாற்போற் காக்குங் காவல் என்ன பயன்படும் ?; நிறை காக்கும் காப்பே தலை -அப்பெண்டிரே தங்கள் கற்பினால் தங்களைக் காத்துக் கொள்ளுதலே தலையாய காவலாம். சிறை காப்பாவது இரவும் பகலும் வீட்டைவிட்டு வெளியேறாமற் காவல் செய்தல். நிறை யென்பது மனத்தைக் கற்புநெறியில் நிறுத்துதல். கற்பில்லாத பெண்ணைக் காவல் செய்தல் அரிது என்பது கருத்து. ஏகாரம் பிரிநிலை.

மணக்குடவர்

மகளிரைச் சிறைசெய்து காக்குங்காவல் யாதினைச் செய்யும்? அவரது கற்புக் காக்குங் காவலே தலையான காவல்.

புலியூர்க் கேசிகன்

சிறை வைத்துக் காக்கின்ற காவல் என்ன பயனைச் செய்து விடும்? மகளிர், ‘நிறை’ என்னும் பண்பைக் காப்பதே சிறப்பானதாகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)வாழ்க்கைத் துணைநலம் (Vaazhkkaith Thunainalam)