குறள் (Kural) - 574

குறள் (Kural) 574
குறள் #574
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்.

பொருள்
அகத்தில் அன்பையும் இரக்கத்தையும் சுரக்கச் செய்யாத கண்கள் முகத்தில் உள்ளவைபோல் தோன்றுவதைத் தவிர, வேறு எந்தப்பயனும் இல்லாதவைகளாகும்.

Tamil Transliteration
Ulapol Mukaththevan Seyyum Alavinaal
Kannottam Illaadha Kan.

மு.வரதராசனார்

தக்க அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தில் உள்ளவை போல் தோன்றுதல் அல்லாமல் வேறு என்ன பயன் செய்யும்.

சாலமன் பாப்பையா

வரம்பிற்கு உட்பட்ட கண்ணோட்டம் இல்லாத கண், முகத்தில் இருப்பது போல் இருக்கிறதே தவிர, அதனால் வேறு என்ன பயன் உண்டு?.

கலைஞர்

அகத்தில் அன்பையும் இரக்கத்தையும் சுரக்கச் செய்யாத கண்கள் முகத்தில் உள்ளவைபோல் தோன்றுவதைத் தவிர, வேறு எந்தப்பயனும் இல்லாதவைகளாகும்.

பரிமேலழகர்

முகத்து உளபோல் எவன் செய்யும் - கண்டார்க்கு, முகத்தின்கண் உளபோலத் தோன்றல் அல்லது வேறு என்ன பயனைச் செய்யும்; அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண் - அளவிறவாத கண்ணோடுதலை உடைய அல்லாத கண்கள். ('தோன்றல்', 'அல்லது' என்னும் சொற்கள் அவாய் நிலையான் வந்தன. கழிகண்ணோட்டத்தின் நீக்குதற்கு 'அளவினான்' என்றார். 'ஒரு பயனையும் செய்யா' என்பது குறிப்பெச்சம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

அளவினாற் கண்ணோட்டம் இல்லாத கண்- தகுந்த அளவிற்குக் கண்ணோட்ட மில்லாத கண்கள்; முகத்து உளபோல் எவன் செய்யும்- முகத்தில் உள்ளன போல் தோன்றுவதல்லது வேறென்ன பயன்தரும்? குருட்டுக் கண்ணிற்கும் கண்ணோட்ட மில்லாத கண்ணிற்கும் வேறுபாடில்லை .' எவன் செய்யும்? என்னும் வினா எதிர்மறை விடையை நோக்கிற்று.போதா அளவினின்று நீக்குதற்கு 'அளவினான் ' என்றார்.

மணக்குடவர்

அவரவர் வாழ்வு காரணமாகக் கண்ணோடுதலைச் செய்யாத கண்கள், முகத்தின்கண் உள்ளனபோன்று இருப்பதன்றி வேறென்ன பயனைச் செய்யும்? அளவென்றது தகுதியை. இது தனக்கும் பயன்படாதென்றது

புலியூர்க் கேசிகன்

தேவையான அளவுக்குக் கண்ணோட்டம் இல்லாத கண்ணானது, முகத்திலே இருப்பதுபோலத் தோன்றுவதைத் தவிர, உடையவனுக்கு என்ன நன்மையைத் தரும்?

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)கண்ணோட்டம் (Kannottam)