குறள் (Kural) - 569

குறள் (Kural) 569
குறள் #569
செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.

பொருள்
முன்கூட்டியே உரிய பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் வேந்தன், போர் வந்துவிட்டால் அதற்கு அஞ்சி விரைவில் வீழ நேரிடும்.

Tamil Transliteration
Seruvandha Pozhdhir Siraiseyyaa Vendhan
Veruvandhu Veydhu Ketum.

மு.வரதராசனார்

முன்னமே தக்கவாறு அரண் செய்து கொள்ளாத அரசன் போர் வந்த காலத்தில் (தற்காப்பு இல்லாமல்) அஞ்சி விரைவில் அழிவான்.

சாலமன் பாப்பையா

நெருக்கடி வருவதற்கு முன்பே தான் தப்பித்துக் கொள்ளப் பாதுகாப்புச் செய்துகொள்ளாத ஆட்சி, நெருக்கடி வந்தபோது பாதுகாப்பு இல்லாததால் அஞ்சி, விரைவில் அழியும்.

கலைஞர்

முன்கூட்டியே உரிய பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் வேந்தன், போர் வந்துவிட்டால் அதற்கு அஞ்சி விரைவில் வீழ நேரிடும்.

பரிமேலழகர்

சிறை செய்யா வேந்தன் - செரு வருவதற்கு முன்னே தனக்குப் புகலாவதோர் அரண்செய்து கொள்ளாத அரசன் செருவந்த போழ்தில் வெருவந்து வெய்து கெடும் - அது வந்த காலத்து ஏமம் இன்மையான் வெருவிக் கடிதின் கெடும். (பகையை வெருவிச் சேர்ந்தார் நீங்குதலின், தனியனாய்த் தானும் வெருவி் அப் பகைவயத்தனாம் என்பதாம். இதனால் தான் அஞ்சும் வினையும் அது செய்தான் எய்தும் பயனும் கூறப்பட்டன.)

ஞா.தேவநேயப் பாவாணர்

சிறை செய்யா வேந்தன் -போர் வருவதற்கு முன்பே தனக்குப் புகலாக ஓர் அரண் செய்து கொள்ளாத அரசன் ; செருவந்த போழ்தில் வெருவந்து வெய்து கெடும் -போர் வந்த போது தனக்குப் பாதுகாப்பின்மையால் அஞ்சி விரைந்து கெடுவான். படைமறவர் அஞ்சித் தன்னை விட்டு நீங்குதலாற் பகைவராற் பிடிக்கப்பட்டு, நாடோ செல்வமோ , உயிரோ அம் மூன்றுமோ இழக்க நேருமாதலின் , 'வெருவந்து வெய்து கெடும்' என்றார். 'வெய்து' என்பது கடுந்துன்புற்று என்றுமாம்.இதனால் அரசன் தானே அஞ்சும் வினையும் அதன் தீங்கும் கூறப்பட்டன.

மணக்குடவர்

தனக்குக் காவலானவற்றை முன்னேயமைத்துச் செய்யாத வேந்தன் செருவந்த காலத்து அச்சமுற்றுக் கடிதுகெடும். இது தனக்கும் அச்சம் வருவன செய்யலாகாதென்றது.

புலியூர்க் கேசிகன்

போர் வருவதற்கு முன்பாகவே பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாத வேந்தன், அது வந்த காலத்தில், பாதுகாப்பு இல்லாமல் அஞ்சியவனாக, அழிந்து போவான்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)வெருவந்த செய்யாமை (Veruvandhaseyyaamai)