குறள் (Kural) - 48

குறள் (Kural) 48
குறள் #48
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.

பொருள்
தானும் அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவிகள் கடைப்பிடிக்கும் நோன்பைவிடப் பெருமையுடையதாகும்.

Tamil Transliteration
Aatrin Ozhukki Aranizhukkaa Ilvaazhkkai
Norpaarin Nonmai Utaiththu.

மு.வரதராசனார்

மற்றவரை அறநெறியில் ஒழுகச்செய்து தானும்அறம் தவறாத இல்வாழ்க்கை , தவம் செய்வாரைவிட மிகச்சிறந்த வல்லமை உடைய வாழ்க்கையாகும்.

சாலமன் பாப்பையா

மற்றவர்களை
அவர்களின் வழியில் வாழச்செய்து, தானும் அறத்திலிருந்து விலகாமல்,
மனைவியுடன் வாழும் வாழ்க்கை, துறவறத்தார் காட்டும் பொறுமையிலும் வலிமை
மிக்கது.

கலைஞர்

தானும்
அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்திடுவோரின்
இல்வாழ்க்கை, துறவிகள் கடைப்பிடிக்கும் நோன்பைவிடப் பெருமையுடையதாகும்.

பரிமேலழகர்

ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை - தவஞ்செய்வாரையும் தத்தம் நெறியின்கண் ஒழுகப் பண்ணித் தானும் தன் அறத்தின் தவறாத இல்வாழ்க்கை; நோற்பாரின் நோன்மை உடைத்து - அத் தவஞ்செய்வார் நிலையினும் பொறையுடைத்து. (பசி முதலிய இடையூறு நீக்கலின் 'ஆற்றின் ஒழுக்கி' என்றார். 'நோற்பார்' என்பது ஆகுபெயர்.நோற்பார் நிலைக்கு அவர்தம்மை உற்ற நோயல்லது இல்வாழ்வார் நிலைபோல் பிறரை உற்ற நோயும் பொறுத்தல் இன்மையின், 'நோற்பாரின் நோன்மையுடைத்து' என்றார்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

ஆற்றின் ஒழுக்கி - தவஞ்செய்வாரைத் தவநெறியில் ஒழுகச் செய்து; அறன் இழுக்கா இல்வாழ்க்கை - தானும் தன் அறத்தினின்று தவறாத, இல்லறவாழ்க்கை; நோற்பாரின் நோன்மை உடைத்து - அத்தவஞ் செய்வார் நிலையினும் மிகுந்த பொறைத் திறனை யுடையது. பசி தகை முதலிய இடையூற்றை நீக்கலின் 'ஆற்றினொழுக்கி' என்றார். இல்வாழ்வான் தன்மை அவன் வாழ்க்கைமேல் ஏற்றிக் கூறப்பட்டது. இல்லறத்தையுங் காத்துத் தவநெறியையும் ஊக்குவது, தவநெறியை மட்டுங் காப்பதினும் வலிமையுடைத்தாயிற்று. நோற்பார் என்பது ஆகுபொருட்சொல்.

மணக்குடவர்

பிறரையும் நன்னெறியிலே ஒழுகப்பண்ணித் தானும் அறத்தின் பாலொழுகும் இல்வாழ்க்கை தவஞ்செய்வாரினும் வலியுடைத்து. ஒழுகப் பண்ணலாவது அவர்க்கு வேண்டுவன அமைத்தல். இது தவத்தினும் வலியுடைத்தென்றது.

புலியூர்க் கேசிகன்

பிறரையும் அறநெறிப்படி நடக்கச் செய்து, தானும் அறம் தவறாத இல்வாழ்க்கை வாழ்வதானது, தவசியரின் நோன்பை விட வலிமையானது ஆகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)இல்வாழ்க்கை (Ilvaazhkkai)