குறள் (Kural) - 47

குறள் (Kural) 47
குறள் #47
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.

பொருள்
நல்வாழ்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வோரில் தலையானவராகத் திகழ்பவர், இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்தான்.

Tamil Transliteration
Iyalpinaan Ilvaazhkkai Vaazhpavan Enpaan
Muyalvaarul Ellaam Thalai.

மு.வரதராசனார்

அறத்தின் இயல்பொடு இல்வாழ்கை வாழ்கிறவன்- வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன் ஆவான்.

சாலமன் பாப்பையா

கடவுளை அறியவும், அடையவும் முயல்பவருள் மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு வாழ்பவனே முதன்மையானவன்.

கலைஞர்

நல்வாழ்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வோரில் தலையானவராகத் திகழ்பவர், இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்தான்.

பரிமேலழகர்

இல் வாழ்க்கை இயல்பினான் வாழ்பவன் என்பான் - இல்வாழ்க்கைக்கண் நின்று அதற்கு உரிய இயல்போடு கூடி வாழ்பவன் என்று சொல்லப்படுவான்; முயல்வாருள் எல்லாம் தலை - புலன்களை விட முயல்வார் எல்லாருள்ளும் மிக்கவன். (முற்றத் துறந்தவர் விட்டமையின், 'முயல்வார்' என்றது மூன்றாம் நிலையில் நின்றாரை. அந்நிலைதான் பல வகைப்படுதலின், எல்லாருள்ளும் எனவும், முயலாது வைத்துப் பயன் எய்துதலின், 'தலை' எனவும் கூறினார்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் - முறைப்படி இல்லறவாழ்க்கை வாழ்பவன் என்று சொல்லப்படுகின்றவன்; முயல்வாருள் எல்லாம் தலை - பற்றறுக்க முயலும் துறவு நெறியார் எல்லாருள்ளும் தலைமையானவனாம். முற்றத்துறந்தார் யாரென மக்களால் அறியப் படாமையின், 'முயல்வாருளெல்லாம்' என்றும், இருவகை யறத்தார்க்கும் உதவியே வீடு பெறுதலின் 'தலை' என்றுங் கூறினார். என்பான் என்னும் செய்வினை வாய்பாட்டுச் சொல் செயப்பாட்டு வினைப்பொருளது.

மணக்குடவர்

நெறியினானே யில்வாழ்க்கை வாழ்பவனென்பான், முயல்வாரெல்லாரினுந் தலையாவான். முயறல்- பொருட்கு முயறல்.

புலியூர்க் கேசிகன்

அறநெறியின் தன்மையோடு இல்வாழ்க்கை வாழ்பவனே வாழ்வு முயற்சியில் ஈடுபடுவாருள் எல்லாம் தலைசிறந்தவன் ஆவான்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)இல்வாழ்க்கை (Ilvaazhkkai)