குறள் (Kural) - 469

குறள் (Kural) 469
குறள் #469
நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.

பொருள்
ஒருவருடைய இயல்பைப் புரிந்து கொண்டுதான் நன்மையைக் கூடச் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் அதுவே தீமையாகத் திருப்பித் தாக்கும்.

Tamil Transliteration
Nandraatra Lullun Thavuruntu Avaravar
Panparin Thaatraak Katai.

மு.வரதராசனார்

அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.

சாலமன் பாப்பையா

அவர் அவர் குணநலன்களை அறிந்து செயல் ஆற்றாவிட்டால் நல்லது செய்வதிலும் பிழை நேர்ந்து விடும்.

கலைஞர்

ஒருவருடைய இயல்பைப் புரிந்து கொண்டுதான் நன்மையைக் கூடச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதுவே தீமையாகத் திருப்பித் தாக்கும்.

பரிமேலழகர்

நன்று ஆற்றல் உள்ளும் தவறு உண்டு - வேற்று வேந்தர்மாட்டு நன்றான உபாயம் செய்தற்கண்ணும் குற்றம் உண்டாம், அவரவர் பண்பு அறிந்து ஆற்றாக்கடை - அவரவர் குணங்களை ஆராய்ந்து அறிந்து அவற்றிற்கு இயையச் செய்யாவிடின். (நன்றான உபாயமாவது: கொடுத்தலும் இன்சொல் சொல்லுதலுமாம். அவை யாவர் கண்ணும் இனியவாதல் சிறப்புடைமையாயின், உம்மை சிறப்பு உம்மை. அவற்றை அவரவர் பண்பு அறிந்து ஆற்றாமையாவது, அவற்றிற்கு உரியர் அல்லாதார்கண்ணே செய்தல். தவறு, அவ்வினை முடியாமை.)

ஞா.தேவநேயப் பாவாணர்

அவர் அவர் பண்பு அறிந்து ஆற்றாக்கடை - அவரவர் சிறப்புக்குணங்களை ஆராய்ந்தறிந்து அவற்றிற்கேற்பச்செய்யாவிடின் ; நன்று ஆற்றலுள்ளும் தவறு உண்டு - வேற்றரசரிடத்து நல்ல ஆம்புடைகளைக் கையாளுமிடத்தும் குற்ற முண்டாம் . இன் சொல்லுங் கொடையும் , ஏதும் வருத்தத்திற்கும் இழப்பிற்கும் இடமின்றி , எல்லார்க்கும் ஏற்றதும் இன்பந்தருவது மாயிருத்தலின் , நல்லாம்புடைகளாம் . அவற்றை அவரவர் பண்பறிந்தாற்றாமையாவது, அவற்றிற்கு உரியாரல்லாதாரிடத்துக் கையாளுதல் . 'தவறு' அவ்வினை முடியாமை அல்லது முடிந்தும் பயனின்மை .

மணக்குடவர்

நன்மையைச் செய்யுமிடத்தினும் குற்றமுண்டாம்; அவரவர் குணமறிந்து செய்யாத விடத்து. இதுவுமோரெண்ணம்.

புலியூர்க் கேசிகன்

அவரவரது இயல்புகளைத் தெரிந்து கொண்டு, அவரவர்க்குத் தகுந்தபடி செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் கூடக் குற்றம் உண்டாகிவிடும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)தெரிந்து செயல்வகை (Therindhuseyalvakai)