குறள் (Kural) - 45
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
பொருள்
இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை.
Tamil Transliteration
Anpum Aranum Utaiththaayin Ilvaazhkkai
Panpum Payanum Adhu.
மு.வரதராசனார்
இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.
சாலமன் பாப்பையா
மனைவி
பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து
கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே.
கலைஞர்
இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை.
பரிமேலழகர்
இல்வாழ்க்கை அன்பும் அறனும் உடைத்தாயின் - ஒருவன் இல்வாழ்க்கை தன் துணைவிமேல் செய்யத்தகும் அன்பினையும், பிறர்க்குப் பகுத்து உண்டல் ஆகிய அறத்தினையும் உடைத்தாயின்; அது பண்பும் பயனும் - அவ்வுடைமை அதற்குப் பண்பும் பயனும் ஆகும். (நிரல்நிறை. இல்லாட்கும் கணவற்கும் நெஞ்சு ஒன்றாகா வழி இல்லறம் கடைபோகாமையின், அன்புடைமை பண்பு ஆயிற்று; அறனுடைமை பயன் ஆயிற்று. இவை மூன்று பாட்டானும் இல்நிலையில் நின்றான் அறஞ்செய்யுமாறு கூறப்பட்டது.)
ஞா.தேவநேயப் பாவாணர்
இல்வாழ்க்கை அன்பும் அறனும் உடைத்தாயின் - ஒருவனது இல்லறவாழ்க்கை அவனுக்கும் அவன் வாழ்க்கைத்துணைக்கும் இடைப்பட்ட இருதலைக் காதலையும் அவர் கருத்தொருமித்துப் பிறர்க்குச் செய்யும் அறவினைகளையும் உடைத்தாயின்; அது பண்பும் பயனும் - அவ்வுடைமை அவ்வாழ்க்கைக்கு முறையே தன்மையும் பயன்விளைவுமாகும். இல்லறவாழ்க்கை இருபகட்டொருசகட் டொழுக்கம் போல்வ தாகலின், கணவன் மனைவியரிடைப்பட்ட இருதலையன்பு அதன் பண்பாயிற்று. அதனாற் செய்யப்படும் அறம் அதன் பயனாயிற்று. அன்பு பண்பும் அறம் பயனும் ஆகும் என்பது நிரனிறை.
மணக்குடவர்
இல்வாழ்க்கையாகிய நிலை யாவர்மட்டும் அன்பு செய்தலையும் அறஞ்செய்தலையும் உடைத்தாயின், அதற்குக் குண மாவதும் பயனாவதும் அவ்விரண்டினையு முடைமை தானே. பயன் வேறு வேண்டாம் :தனக்கும் பிறர்க்கும் உண்டான முகமலர்ச்சி தானே யமையுமென்பது. இது பழியோடு வாராத வுணவை நுகர வேற்பார் மாட்டு அன்புசெய்யவேண்டுமென்பதும் சீலனாய்க் கொடுக்க வேண்டுமென்பதும் கூறிற்று.
புலியூர்க் கேசிகன்
கணவன் மனைவியருக்குள் அன்புப் பிணைப்பும், அறநெறிப்படியே நிகழ்ந்து வருவதும் உடையதானால், இல்வாழ்க்கையில் பண்பும் பயனும் அந்த வாழ்வே ஆகும்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் (Illaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | இல்வாழ்க்கை (Ilvaazhkkai) |