குறள் (Kural) - 44
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
பொருள்
பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது.
Tamil Transliteration
Pazhiyanjip Paaththoon Utaiththaayin Vaazhkkai
Vazhiyenjal Egngnaandrum Il.
மு.வரதராசனார்
பொருள்
சேர்க்கும் பொது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் போது பகுந்து
உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.
சாலமன் பாப்பையா
பொருள் தேடும்போது பாவத்திற்குப் பயந்து தேடிய பொருளை உறவோடு பகிர்ந்து உண்ணும் இல்வாழ்பவனின் பரம்பரை ஒருகாலும் அழிவதில்லை.
கலைஞர்
பழிக்கு
அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச்
சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே
இருக்கிறது.
பரிமேலழகர்
பழி அஞ்சிப் பாத்து ஊண் வாழ்க்கை உடைத்தாயின் - பொருள் செய்யுங்கால் பாவத்தை அஞ்சி ஈட்டி, அப்பொருளை இயல்பு உடைய மூவர் முதலாயினார்க்கும் தென் புலத்தார் முதலிய நால்வர்க்கும் பகுத்துத் தான் உண்டலை ஒருவன் இல்வாழ்க்கை உடைத்தாயின்; வழி எஞ்ஞான்றும் எஞ்சல் இல் - அவன் வழி உலகத்து எஞ்ஞான்றும் நிற்றல் அல்லது இறத்தல் இல்லை. (பாவத்தான் வந்த பிறன் பொருளைப் பகுத்து உண்ணின், அறம் பொருளுடையார் மேலும், பாவம் தன் மேலுமாய் நின்று வழி எஞ்சும் ஆகலின், 'பழி அஞ்சி' என்றார். வாழ்வானது உடைமை வாழ்க்கை மேல் ஏற்றப்பட்டது.)
ஞா.தேவநேயப் பாவாணர்
வாழ்க்கை - ஒருவனது இல்லறவாழ்க்கை; பழி அஞ்சிப் பாத்துஊண் உடைத்தாயின் - ஈயாத கஞ்சன் என்று பிறர் பழித்தற்கு அஞ்சித் துறந்தார் முதலிய மூவர்க்கும் தென்புலத்தார் முதலிய ஐவர்க்கும் அவன் பொருளைப் பகுத்தளித்து உண்டலை இயல்பாகக் கொண்டிருப்பின் ; வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்-அவனது மரபுவழி ஒருபோதும் அறாது எக்காலும் தொடர்ந்து வருவதாம். இறைவனருளும் உலகோர் வாழ்த்தும் அவன் வழியை நீடிக்கச் செய்யும் என்பது கருத்து.
மணக்குடவர்
இல்வாழ்க்கையாகிய நிலை, பழியையுமஞ்சி பகுத்துண்டலையுமுடைத்தாயின், தனதொழுங்கு, இடையறுதல் எக்காலத்தினுமில்லை. மேல் பகுக்குமாறு கூறினார். பகுக்குங்காற் பழியோடு வாராத பொருளைப் பகுக்க வேண்டுமென்று கூறினார்.
புலியூர்க் கேசிகன்
பழிக்குப் பயமும், உள்ளதைப் பிறர்க்குப் பகுத்துக் கொடுத்து உண்ணும் இயல்பும் உடையதானால், வாழ்க்கை வழிக்கு எப்போதுமே குறைவு இல்லை
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் (Illaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | இல்வாழ்க்கை (Ilvaazhkkai) |