குறள் (Kural) - 438

குறள் (Kural) 438
குறள் #438
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று.

பொருள்
எல்லாக் குற்றங்களையும்விடத் தனிப்பெருங் குற்றமாகக் கருதப்படுவது பொருள் சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈயாமல் வாழ்வதுதான்.

Tamil Transliteration
Patrullam Ennum Ivaranmai Etrullum
Ennap Patuvadhon Randru.

மு.வரதராசனார்

பொருளினிடத்தில் பற்றுக் கொள்ளும் உள்ளமாகிய ஈயாத்தன்மை, குற்றம் எதனோடும் சேர்ந்து எண்ணத்தகாத ஒரு தனிக் குற்றமாகும்.

சாலமன் பாப்பையா

செலவிட வேண்டியவற்றிற்குச் செலவிடாமல் செல்வத்தின் மீது ஆசை கொண்ட கஞ்ச மனத்தைப் பெற்றிருப்பது குற்றங்கள் எல்லாவற்றிலும் கொடிய குற்றமாகும்.

கலைஞர்

எல்லாக் குற்றங்களையும்விடத் தனிப்பெருங் குற்றமாகக் கருதப்படுவது பொருள் சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈ.யாமல் வாழ்வதுதான்.

பரிமேலழகர்

பற்றுள்ளம் என்னும் இவறன்மை -பொருளை விடத்தகும் இடத்து விடாது பற்றுதலைச் செய்யும் உள்ளம் ஆகிய உலோபத்தினது தன்மை, எற்றுள்ளும் எண்ணப்படுவது ஒன்று அன்று - குற்றத் தன்மைகள் எல்லாவற்றுள்ளும் வைத்து எண்ணப்படுவது ஒன்று அன்று , மிக்கது. (இவறலது தன்மையாவது : குணங்கள் எல்லாம் ஒருங்கு உளவாயினும் அவற்றைக் கீழ்ப்படுத்துத் தான் மேற்படவல்ல இயல்பு ஒழிந்தன அதுமாட்டாமையின், 'எற்றுள்ளும் எண்ணப்படுவதொன்று அன்று' என்றார். 'எவற்றுள்ளும்' என்பது இடைக்குறைந்து நின்றது. இவை இரண்டு பாட்டானும் உலோபத்தின் தீமை கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

பற்றுள்ளம் என்னும் இவறன்மை - பொருளைச் செலவிட வேண்டிய விடத்துச் செலவிடாது தன்னுடனேயே வைத்துக் கொள்ளுமாறு, உ ள் ள த் தா ல் அதை இறுகப்பற்றும் கஞ்சத்தன்மை; எற்றுள்ளும் எண்ணப்படுவது ஒன்று அன்று - பிற குற்றங்களோடு சேர்த்தெண்ணப்படாது தனியாக வைக்க வேண்டிய ஒரு குற்றமாகும். கஞ்சத்தனம் எல்லா நற்குணங்களையும் அடக்கி அவற்றைப் பயன்படாவாறு செய்து விடுதலின், ' எற்றுள்ளும் எண்ணப்படுவ தொன்றன்று' என்றார். எவற்றுள்ளும் என்பது ' எற்றுள்ளும் ' என இடைக்குறைந்து நின்றது.

மணக்குடவர்

கூடின பொருளை விடாமையாகிய உலோபம் யாதொன்றினுள்ளும் எண்ணப்படுவ தொன்றன்று. இஃது உலோபம் தனக்கும் பிறர்க்கும் பயன்படாமையால் ஒரு பொருளாக மதிக்கப்படா தென்றது.

புலியூர்க் கேசிகன்

செல்வத்தின் மேல் பற்றுக் கொண்ட உள்ளம் எனப்படும் கஞ்சத்தனம், எந்தக் குற்றங்களோடும் எண்ணப்படும் ஒன்றாக இல்லாமற், பெருங் குற்றமாகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)குற்றங்கடிதல் (Kutrangatidhal)