குறள் (Kural) - 435

குறள் (Kural) 435
குறள் #435
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.

பொருள்
முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும்.

Tamil Transliteration
Varumunnark Kaavaadhaan Vaazhkkai Erimunnar
Vaiththooru Polak Ketum.

மு.வரதராசனார்

குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்.

சாலமன் பாப்பையா

தனக்கு ஒரு குற்றம் வருவதற்கு முன்பே வராமல் காத்துக் கொள்ளாத அரசு, நெருப்பிற்கு முன் வைக்கப்பட்ட வைக்கோல் போல அழிந்துபோகும்.

கலைஞர்

முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும்.

பரிமேலழகர்

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை - குற்றம் வரக்கடவதாகின்ற முற்காலத்திலே அதனைக் காவாத அரசன் வாழ்க்கை, எரி முன்னர் வைத்தூறு போலக் கெடும் - அது வந்தால் எரிமுகத்து நின்ற வைக்குவை போல அழிந்து விடும். ('குற்றம்' என்பது அதிகாரத்தான் வந்தது. முன்னர் என்றதன் ஈற்றது பகுதிப்பொருள் விகுதி, 'வரும்' என்னும் பெயரெச்சம் 'முன்னர்' என்னும் காலப்பெயர் கொண்டது; அதனால் காக்கலாம் காலம் பெறப்பட்டது. குற்றம் சிறிதாயினும், அதனால் பெரிய செல்வம் அழிந்தே விடும் என்பது உவமையால் பெற்றாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை - குற்றம் நேர்வதற்கு முன்பே அதையறிந்து தடுக்காத அரசனது வாழ்க்கை; எரி முன்னர் வைத்தூறுபோலக் கெடும் -அது நேர்ந்தவுடன் நெருப்பு முகத்து நின்ற வைக்கோற்போர்போல அழிந்து விடும். குற்றம்என்பது அதிகாரத்தால் வந்தது. முன் - முன்னம் -முன்னர். குற்றத்தை அது வருமுன் காக்கவேண்டு மென்பதும் குற்றஞ் சிறிதாயினும் அதனாற் பேரிழப்பு விரைந்து நேருமென்பதும், உவமையாற் பெறப்பட்டன.

மணக்குடவர்

துன்பம் வருவதன்முன், அதற்குத் தக்கது அறிந்து காவல் செய்யானது செல்வம் எரிமுன்னர்க்கிடந்த வைத்திரள் போலக் கெடும். இது முந்துற்றுக் காவல் செய்வன செய்யாமையும் குற்ற மென்றது.

புலியூர்க் கேசிகன்

குற்றம் வருவதற்கு முன்பே, வராமல் காத்துக் கொள்ளாதவன் வாழ்க்கையானது, நெருப்பின் முன்னர் வைத்த வைக்கோல் போர் போலக் கெடும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)குற்றங்கடிதல் (Kutrangatidhal)