குறள் (Kural) - 380

குறள் (Kural) 380
குறள் #380
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.

பொருள்
இயற்கை நிலையை மாற்றி மற்றொரு செயற்கை நிலையை அமைத்திட முனைந்தாலும், இயற்கை நிலையே முதன்மையாக வந்து நிற்பதால் அதைவிட வலிமையானவையாக வேறு எவை இருக்கின்றன?.

Tamil Transliteration
Oozhir Peruvali Yaavula Matrondru
Soozhinun Thaanmun Thurum.

மு.வரதராசனார்

ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியைஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.

சாலமன் பாப்பையா

விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்‌; ஆகவே விதியை விட வேறு எவை வலிமையானவை?.

கலைஞர்

இயற்கை நிலையை மாற்றி மற்றொரு செயற்கை நிலையை அமைத்திட முனைந்தாலும், இயற்கை நிலையே முதன்மையாக வந்து நிற்பதால் அதைவிட வலிமையானவையாக வேறு எவை இருக்கின்றன?.

பரிமேலழகர்

மற்ற ஒன்று சூழினும் தான் முந்துறும் - தன்னை விலக்குதற் பொருட்டுத் தனக்கு மறுதலையாவதோர் உபாயத்தைச் சூழினும் , தான் அவ்வுபாயமேயானும் பிறிதொன்றானும் வழியாக வந்து அச்சூழ்ச்சியின் முற்பட்டு நிற்கும், ஊழின் பெருவழி யா உள - அதனால் ஊழ்போல மிக்க வலியுடையன யாஉள - அதனால் ஊழ்போல மிக்க வலியுடையன யாவை உள? ('பெருவலி' ஆகுபெயர். சூழ்தல். பலருடனும் பழுதற எண்ணுதல். செய்தற்கே அன்றிச் சூழ்தற்கும் அவதி கொடாது என்றமையின், உம்மை எச்ச உம்மை. எல்லாம் வழியாக வருதலுடைமையின், ஊழே வலியது என்பதாம். இதனான் அவ்விருவகை ஊழின் வலியும் பொதுவாகக் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

ஊழின் பெருவலி யா உள - ஊழைப்போல மிகுந்த வலிமையுள்ளவை வேறு எவையிருக்கின்றன ? ; மற்று ஒன்று சூழினும் தான் முந்து உறும் - அதை விலக்குதற்கு வேறொரு வழியை ஆய்ந்து எண்ணினும், அவ்வழியையே தனக்கும் வழியாகக்கொண்டு அது அவ்வெண்ணத்தின் முற்பட்டு வந்து நிற்கும். உறுவலி, மதவலி என்பனபோலப் பெருவலி என்பது ஆகுபெயர். சூழினும் என்பது எச்சவும்மை. 'சூழினுந்தான் முந்துறும்' என்றமையால், சூழ்ச்சியை நிறைவேற்றுதல் ஒருகாலுங் கூடா தென்பதாம். சூழ்தலாவது நாற்புறமும் வளைந்து முற்றுகையிடுதல்போலப் பகைவர் ஒருவழியாலும் தப்பமுடியாவாறு தீரஎண்ணுதல். இங்குப் பகை ஊழ்.

மணக்குடவர்

ஊழினும் மிக்க வலியுடையன யாவையுள? பிறிதொன்றை யாராயுங் காலத்தும் தான் முற்பட அவ்வாராய்ச்சிக்கு உடன்பட்டுநிற்கும்.

புலியூர்க் கேசிகன்

ஊழைக் காட்டிலும் பெரிதும் வலிமையானவை யாவை உள்ளன! மற்றொன்றை வலியது என்று கருதினாலும், அங்கும் ஊழே முன்வந்து நிற்கும்!

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)ஊழியல் (Oozhiyal)
அதிகாரம் (Adhigaram)ஊழ் (Oozh)