குறள் (Kural) - 361

குறள் (Kural) 361
குறள் #361
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.

பொருள்
ஆசையை, எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றி முளைக்கும் விதை என்று கூறலாம்.

Tamil Transliteration
Avaaenpa Ellaa Uyirkkum Enj Gnaandrum
Thavaaap Pirappeenum Viththu.

மு.வரதராசனார்

எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்றுக் கூறுவர்.

சாலமன் பாப்பையா

எல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் வரும் பிறப்பை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று பெரியோர் கூறுவர்.

கலைஞர்

ஆசையை, எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றி முளைக்கும் விதை என்று கூறலாம்.

பரிமேலழகர்

எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பு ஈனும் வித்து - எல்லா உயிர்கட்கும் எக்காலத்தும் கெடாது வருகின்ற பிறப்பினை விளைவிக்கும் வித்து: அவாஅ என்ப - அவா என்று சொல்லுவர் நூலோர். (உடம்பு நீங்கிப்போம் காலத்து அடுத்த வினையும், அது காட்டும் கதி நிமித்தங்களும் அக்கதிக்கண் அவாவும் உயிரின்கண் முறையே வந்துதிப்ப, அறிவை மோகம் மறைப்ப, அவ்வுயிரை அவ்வவா அக்கதிக்கண் கொண்டுசெல்லும் ஆகலான், அதனைப் பிறப்பீனும் வித்து என்றும் கதிவயத்தான் உளதாய அவ்வுயிர் வேறுபாட்டினும் அவை தன்மை திரியும் உற்சர்ப்பிணி, அவசர்ப்பிணி என்னும் கால வேறுபாட்டினும் அது வித்தாதல் வேறு படாமையின், 'எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்'என்றும் இஃது எல்லாச் சமயங்கடகும் ஒத்தலான் 'என்ப' என்றும்கூறினார். இதனான், பிறப்பிற்கு அவா வித்து ஆதல்கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவா அப்பிறப்பு ஈனும் வித்து - எல்லாவுயிர்கட்கும் எக்காலத்தும் கெடாது வருகின்ற பிறப்பை விளைவிக்கும் வித்து; அவா என்ப - அவா என்று சொல்வர் மெய்ப்பொருள் நூலார். உடம்பு நீக்குங் காலத்து , அடுத்து நுகரவேண்டிய வினையும் அது காட்டும் பிறவி வகுப்புக் குறியும் அவ்வகுப்பின்கண் அவாவும் உயிரின்கண் முறையேதோன்றி, அவ்வுயிரை அவ்வவா, அவ்வகுப்பின்கண் கொண்டு செல்லுமாகலின் , அதனைப் 'பிறப்பீனும்வித்து' என்றார். எல்லாவுயிரும் என்றது விலங்கு , நரகர் , மக்கள் , தேவர் என்னும் நால் வகுப்புயிர்களையும்.

மணக்குடவர்

எல்லாவுயிர்க்கும் எல்லா நாளுங் கேடில்லாத பிறப்பைக் கொடுக்கும் விதையாவது ஆசையென்று சொல்லுவர். இஃது ஆசை துன்பம் தருதலேயன்றிப் பிறப்பையும் தருமென்றது

புலியூர்க் கேசிகன்

எல்லா உயிருக்கும் எக்காலத்திலும் பிறவி என்னும் துன்பத்தைத் தருகின்றதான வித்து, ‘அவா’ என்பதுதான் என்று ஆன்றோர் கூறுவர்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)அவா அறுத்தல் (Avaavaruththal)