குறள் (Kural) - 360
காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
பொருள்
விருப்பு, வெறுப்பு, அறியாமை இவற்றுக்கு இடம் தராதவர்களை நெருங்குகிற துன்பம் அழிந்துவிடும்.
Tamil Transliteration
Kaamam Vekuli Mayakkam Ivaimundran
Naamam Ketakketum Noi.
மு.வரதராசனார்
விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக் குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் கெடுமாறு ஒழுகினால் துன்பங்கள் வராமற் கெடும்.
சாலமன் பாப்பையா
விருப்பு, வெறுப்பு, மயக்கம் என்னும் இம்மூன்றன் பெயருங்கூட உள்ளத்திற்குள் இல்லாது போனால், அவற்றால் வரும் துன்பங்களும் இல்லாமல் போகும்.
கலைஞர்
விருப்பு, வெறுப்பு, அறியாமை இவற்றுக்கு இடம் தராதவர்களை நெருங்குகிற துன்பம் அழிந்துவிடும்.
பரிமேலழகர்
காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெட - ஞான யோகங்களின் முதிர்ச்சியுடையார்க்கு விழைவு, வெறுப்பு, அவிச்சை என்னும் இக்குற்றங்கள் மூன்றனுடைய பெயருங்கூடக் கெடுதலான், நோய் கெடும் - அவற்றின் காரியமாய வினைப்பயன்கள் உளவாகா. (அநாதியாய அவிச்சையும் 'அதுபற்றி யான்' என மதிக்கும் அகங்காரமும், அதுபற்றி எனக்கு இது வேண்டும் என்னும் அவாவும், அதுபற்றி அப்பொருட்கண் செல்லும் ஆசையும், அதுபற்றி அதன் மறுதலைக்கண் செல்லும் கோபமும், என வடநூலார் குற்றம் ஐந்து என்றார். இவர் அவற்றுள் அகங்காரம் அவிச்சைக்கண்ணும் அவாவுதல் என்பது ஆசைக்கண்ணும் அடங்குதலான், 'மூன்று' என்றார். இடையறாத ஞானயோகங்களின் முன்னர் இக்குற்றங்கள் மூன்றும் காட்டுத்தீ முன்னர்ப் பஞ்சுத் துய்போலும் ஆகலின், அம் மிகுதிதோன்ற 'இவை மூன்றன் நாமங்கெட' என்றார். இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. 'கெட' என்பது எச்சத் திரிவு. 'நோய்' சாதியொருமை. காரணமாய அக்குற்றங்களைக் கொடுத்தார் காரியமாகிய வினைகளைச்செய்யாமையின், அவர்க்கு வரக்கடவ துன்பங்களும் இலவாதல் மெய்உணர்வின்பயன் ஆகலின், இவை இரண்டுபாட்டும்இவ்வதிகாரத்த வாயின. இவ்வாற்றானே மெய்யுணர்ந்தார்க்கு நிற்பன எடுத்த உடம்பும் அதுகொண்ட வினைப்பயன்களுமே என்பது பெற்றாம்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெட - ஒக வொழுக்கத்தில் முதிர்ந்தவர்க்கு விருப்பு, வெறுப்பு, அறியாமை என்னும் இக்குற்றங்கள் முன்றும் தம் பெயருங் கூடத்தோன்றாவாறு முற்றக் கெடுதலால்; நோய்கெடும் - அவற்றின் விளைவாகிய வினைப்பயன்களும் அறவே கெடும். தொடக்கமிலியாகிய அறியாமையும், அது பற்றி யான்எனமதிக்கும் அகப்பற்றும், அது பற்றி எனக்கிதுவேண்டு மென்னும் அவாவும், அது பற்றி அப்பொருட்கண் செல்லும் ஆசையும், அது பெறாவழியெழுஞ் சினமும் என வடநூலார் கூறும் குற்றம் ஐந்தனுள், அகப்பற்றை அறியாமைக் கண்ணும் அவாவை ஆசைக் கண்ணும் திருவள்ளுவர் அடக்கிக் காமவெகுளி மயக்கமென மூன்றாகக் கூறியதாகப் பரிமேலழகர் உரைப்பர். இது பாட்டிக்கு நூல் நூற்கப் பேர்த்தி கற்றுக் கொடுத்தாள் என்பது போன்றதே. வேள்வி யொன்றே யியற்றும் ஆரியர் ஒகமுறை கற்றது தமிழரிடத்திலேயேயாதலின் , தமிழ் நூலார் கூறும் முக்குற்றங்களையே வடநூலார் ஐந்தாக விரித்தார் என அறிக. வீடுபெறுவானின் முழுத்தூய்மையைக் குறிக்க 'மூன்றன் நாமங்கெட' என்றார். நாமமும் என்னும் இழிவு சிறப்பும்மை தொக்கது. 'நோய்' என்பது வகுப்பொருமை. 'நாமம்' என்பது அச்சம் என்று பொருள்படின் தென்சொல்லும், பெயர் என்று பொருள்படின் வடசொல்லும் ஆகும். பெயர்ப் பொருள் குறிக்கவும் இங்கு வடசொல்லை யாளத்தேவையில்லை. அக்காலத்தில் மொழியாராய்ச்சியும் தென்மொழி -வடமொழிப் போராட்டமும் இன்மையால் , திருவள்ளுவர் தம் கருத்தைத் தமிழொழுக்கத்தின் சிறப்பை நிலைநாட்டுவதிற் செலுத்தினாரேயன்றி மொழித்தூய்மை போற்றுவதிற் செலுத்தவில்லை. மேலும், அக்காலத்தில் தமிழர் அயிர்க்குமளவு வடசொற்கள் தமிழிற் பெருவாரியாகக் கலக்கவில்லை. ஒருசில சொற்களே கலந்திருந்ததால் அவை தமிழறிஞர் கண்ணைக் கவர்ந்தில. அல்லாக்கால், காமம் வெகுளி மயக்க மிவற்றின்பேர் தாமுங் கெடக்கெடு நோய். என்றே திருவள்ளுவர் யாத்திருப்பார்.
மணக்குடவர்
ஆசையும் வெகுளியும் மயக்கமு மென்னும் இவை மூன்றினது நாமம்போக வினைபோம். வினைகெடுதற்கு வழி இதுவென்று கூறுதலான் இது மெய்யுணர்தலாயிற்று.
புலியூர்க் கேசிகன்
காமம், வெகுளி, மயக்கம் என்னும் இவை மூன்றின் பெயர்களைக் கூட உள்ளத்திலிருந்து அறவே நீக்கிவிட்டால், பிறவித் துன்பமும் கெடும்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | துறவறவியல் (Thuravaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | மெய்யுணர்தல் (Meyyunardhal) |