குறள் (Kural) - 358

குறள் (Kural) 358
குறள் #358
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.

பொருள்
அடுத்த பிறப்பு எனக் கூறப்படும் அறியாமையைப் போக்கித் தெளிந்த உண்மையை நிலைநாட்டுவதுதான் அறிவுடைமையாகும்.

Tamil Transliteration
Pirappennum Pedhaimai Neengach Chirappennum
Semporul Kaanpadhu Arivu.

மு.வரதராசனார்

பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.

சாலமன் பாப்பையா

பிறவி என்னும் அறியாமையிலிருந்து விலகப் பிறவாமை என்னும் செவ்விய பொருளைக் காண்பதே மெய்யுணர்தல்.

கலைஞர்

அடுத்த பிறப்பு எனக் கூறப்படும் அறியாமையைப் போக்கித் தெளிந்த உண்மையை நிலைநாட்டுவதுதான் அறிவுடைமையாகும்.

பரிமேலழகர்

பிறப்பு என்னும் பேதைமை நீங்க - பிறப்பிற்கு முதற்காரணமாய அவிச்சை கெட, சிறப்பு என்னும் செம்பொருள் காண்பது அறிவு - வீட்டிற்கு நிமித்த காரணமாய செவ்விய பொருளைக் காண்பதே ஒருவர்க்கு மெய் உணர்வாவது. (பிறப்பென்னும் பேதைமை எனவும் 'சிறப்பு என்னும் செம்பொருள்' எனவும், காரியத்தைக் காரணமாக உபசரித்தார். ஐவகைக் குற்றங்களுள் அவிச்சை ஏனைய நான்கிற்கும் காரணமாதல் உடைமையின், அச்சிறப்புப் பற்றி அதனையே பிறப்பிற்குக் காரணமாகக் கூறினார். எல்லாப் பொருளினும் சிறந்ததாகலான், வீடு சிறப்பு எனப்பட்டது. தோற்றக்கேடுகள் இன்மையின் நித்தமாய் நோன்மையால் தன்னையொன்றும் கலத்தல் இன்மையின் தூய்தாய் , தான் எல்லாவற்றையும் கலந்து நிற்கின்ற முதற்பொருள் விகாரமின்றி எஞ்ஞான்றும் ஒரு தன்மைத்தாதல் பற்றி , அதனைச் 'செம்பொருள்' என்றார். மேல் 'மெய்ப்பொருள்' எனவும் 'உள்ளது' எனவும் கூறியதூஉம் இதுபற்றி என உணர்க. அதனைக் காண்கையாவது உயிர் தன்அவிச்சை கெட்டு அதனொடு ஒற்றுமையுற இடைவிடாது பாவித்தல், இதனைச் 'சமாதி எனவும்' 'சுக்கிலத்தியானம்' எனவும் கூறுப. உயிர் உடம்பின் நீங்கும் காலத்து அதனான் யாதொன்று பாவிக்கப்பட்டது, அஃது அதுவாய்த் தோன்றும் என்பது எல்லா ஆகமங்கட்கும் துணிபு ஆகலின், வீடு எய்துவார்க்கு அக்காலத்துப் பிறப்பிற்கு ஏதுவாய பாவனை கெடுதற்பொருட்டுக் கேவலப் பொருளையே பாவித்தல் வேண்டுதலான், அதனை முன்னே பயில்தலாய இதனின் மிக்க உபாயம் இல்லை என்பது அறிக. இதனான் பாவனை கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

பிறப்பு என்னும் பேதைமை நீங்க - பிறப்பிற்கு முதற்கரணகமாகிய அறியாமை கெட ; சிறப்பு என்னும் செம்பொருள் காண்பது அறிவு - வீட்டிற்கு வினைமுதற் கரணகம் (நிமித்தகாரணம்) ஆகிய செவ்விய பொருளை அறிவதே ஓகியர்க்கு அறிவாவது. 'பிறப்பென்னும் பேதைமை' என்றும், 'சிறப்பென்னுஞ் செம்பொருள்' என்றும் கருமகத்தைக் கரணகமாகச் சார்த்திக் கூறினார். எல்லா இன்பங்களுள்ளுஞ் சிறந்ததாகையால் வீடு 'சிறப்பு' எனப்பட்டது. எத்துணைப் பாகுபாடுமின்றி ஒன்றாய், முதலும் முடிவுமின்றி நித்தமாய், பிறிதொன்றோடும் உண்மையிற் கலவாது தூய்மையாய், ஒரு வகையிலும் ஒப்பற்ற தனிநிலையாய், எல்லாப் பொருளையும் பற்றி நின்றும் அவற்றால் தாக்குண்ணாததாய், எத்துணைக் காலமாகியுந் திரியாததாய், என்றும் ஓரு தன்மையதாக நிற்றல் பற்றிப் பரம்பொருளைச் 'செம்பொருள்' என்றார். 756-ஆம் குறளில் 'மெய்ப்பொருள்' என்றும், அடுத்த குறளில் 'உள்ளது' என்றும் கூறியதும் இது பற்றியே. அப்பொருளைக் காண்கையாவது, ஆதன் தன் அறியாமை நீங்கி அதை இடைவிடாது எண்ணித் தன் உள்ளத்தால் அதனொடு இரண்டறக் கலத்தல். காண்கை யென்றது அகக்கண்ணாற் காண்டல். உயிர் உடம்பினின்று நீங்கும்போது அதன் எண்ணம் எதைப் பற்றியதோ அதுவாய் அது தோன்றுமென்பது சமய நூற்றுணிபாகலின், வீடு பெறுவார்க்கு அக்காலத்துப் பிறவிக்கேதுவான எண்ணம் இல்லாமைப் பொருட்டு இறைவனையே உன்னுதல் இன்றியமையாததாதலால், இதனை இடைவிடாது பயில வேண்டுமென்பது கருத்து. இதனால் உன்னுகை கூறப்பட்டது

மணக்குடவர்

பிறப்பாகிய அறியாமையினின்று நீங்கப் பிறவாமை யாகிய செவ்விய பொருளைக் காண்பது அறிவாம். பிறவாமை சிறந்ததாதலின், சிறப்பு என்னப்பட்டது. தான் பிறந்தானாகவும் செத்தானாகவும் கருதுகின்ற அறியாமையை விட்டுத் தனக்குச் சாவில்லையாகவும் பிறப்பில்லையாகவும் தான் நிற்கின்ற நிலைமையைக் காணவேண்டுமென்றவாறாயிற்று.

புலியூர்க் கேசிகன்

பிறப்புக்குக் காரணமான அறியாமைகள் நீங்குவதற்குச் சிறப்பான துணை எனப்படும் செம்பொருளை முயன்று காண்பதே மெய்யுணர்வு ஆகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)மெய்யுணர்தல் (Meyyunardhal)