குறள் (Kural) - 357
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.
பொருள்
உண்மையை ஆராய்ந்து உறுதியாக உணர்பவர்கள் மீண்டும் பிறப்பு உண்டு எனக் கருத மாட்டார்கள்.
Tamil Transliteration
Orththullam Ulladhu Unarin Orudhalaiyaap
Perththulla Ventaa Pirappu.
மு.வரதராசனார்
ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ள தென எண்ண வேண்டா.
சாலமன் பாப்பையா
பெரியவர்களிடம் கேட்டவற்றை மனத்துள் முழுமையாகக் கொண்டு, இடைவிடாமல் மெய்ப்பொருளை உணர்பவருக்குத் திரும்பவும் ஒரு பிறவி இருக்கும் என்று எண்ண வேண்டா.
கலைஞர்
உண்மையை ஆராய்ந்து உறுதியாக உணர்பவர்கள் மீண்டும் பிறப்பு உண்டு எனக் கருத மாட்டார்கள்.
பரிமேலழகர்
உள்ளம் ஒருதலையா ஓர்த்து உள்ளது உணரின் - அங்ஙனம் கேட்ட உபதேச மொழிப் பொருளை, ஒருவன் உள்ளம் அளவைகளானும் பொருந்துமாற்றானும் தெளிய ஆராய்ந்து அதனான் முதற்பொருளை உணருமாயின், பேர்த்துப் பிறப்பு உள்ள வேண்டா - அவனுக்கு மாறிப் பிறப்புளதாக நினைக்க வேண்டா. ('ஒருதலையா ஓர்த்து' என இயையும். அளவைகளும் பொருந்தும் ஆறும் மேலே உரைத்தாம். இதனான் விமரிசம் கூறப்பட்டது.)
ஞா.தேவநேயப் பாவாணர்
உள்ளம் ஒருதலையா ஓர்த்து உள்ளது உணரின் - மெய்யோதியர்பாற் கேட்ட செவியறிவுறுத்தப் பொருளை ஓர் ஓகியின் உள்ளம் உத்தியானும் அளவைகளானும் தெளியவாராய்ந்து உண்மைப் பொருளை யுணருமாயின்; பேர்த்துப் பிறப்பு உள்ள வேண்டா - அவனுக்கு மீண்டுப் பிறப்புள்ளதாக நினைக்க வேண்டியதில்லை, ஓதியர் = ஞானியர் (வ.) ஒகி = யோகி(வ.) அவைகள் முன்னரே 242-ஆம் குறளுரையிற் கூறப்பட்டன. இங்குத் தெளிவு கூறப்பட்டது.
மணக்குடவர்
உள்ளமானது உள்ள பொருளை யாராய்ந்து ஒருதலையாக வுணருமாயின், பின்னைப் பிறப்புண்டென்று நினையா தொழிக. மெய்யுணர்ந்தவர் பிறப்புண்டென்று நினையாதொழிக வென்றவாறு.
புலியூர்க் கேசிகன்
என்றும் உளதான மெய்ப்பொருளை உள்ளம் ஆராய்ந்து அறிந்து விட்டதானால், மீளவும் தனக்குப் பிறப்பு உள்ளதென்று அவன் எண்ண வேண்டாம்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | துறவறவியல் (Thuravaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | மெய்யுணர்தல் (Meyyunardhal) |