குறள் (Kural) - 351

குறள் (Kural) 351
குறள் #351
பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு

பொருள்
பொய்யான ஒரு பொருளை மெய்ப்பொருள் என்று மயங்கி நம்புகிறவனின் வாழ்க்கை சிறப்பாக அமையாது.

Tamil Transliteration
Porulalla Vatraip Porulendru Unarum
Marulaanaam Maanaap Pirappu.

மு.வரதராசனார்

மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.

சாலமன் பாப்பையா

பொய்யானவற்றை மெய் என்று எண்ணும் மயக்கத்தால் இழிவான பிறப்பு வரும்.

கலைஞர்

நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.

பரிமேலழகர்

பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும் மருளான் ஆம் - மெய்ப்பொருள் அல்லவற்றை மெய்ப்பொருள் என்று உணரும் விபரீத உணர்வானே உளதாம், மாணாப் பிறப்பு - இன்பம் இல்லாத பிறப்பு. (அவ் விபரீத உணர்வாவது, மறுபிறப்பும், இருவினைப் பயனும், கடவுளும் இல்லை எனவும் மற்றும் இத்தன்மையவும் சொல்லும் மயக்க நூல் வழக்குகளை மெய்ந்நூல் வழக்கு எனத் துணிதல். குற்றியை மகன் என்றும் இப்பியை வெள்ளி என்றும் இவ்வாறே ஒன்றனைப்பிறிதொன்றாகத் துணிதலும் அது. 'மருள், மயக்கம், விபரீத உணர்வு, அவிச்சை' என்பன ஒருபொருட் கிளவி. நரகர், விலங்கு, மக்கள், தேவர் என்னும் நால்வகைப்பிறப்பினும் உள்ளது துன்பமே ஆகலின், 'மாணாப் பிறப்பு' என்றார். இதனால் பிறப்புத் துன்பம் என்பதூஉம், அதற்கு முதற்காரணம் அவிச்சை என்பதூஉம் கூறப்பட்டன.)

ஞா.தேவநேயப் பாவாணர்

பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும் மருளான்-மெய்ப்பொரு ளல்லாதவற்றை மெய்ப்பொருளென்றுணரும் மயக்கவுணர்வினால்; மாணாப் பிறப்பு ஆம்-சிறந்த வீடு பேறின்றி இழிந்த பிறவியே உண்டாம். மயக்க வுணர்வாவது, இறைவனில்லை யென்றும், உலகம் தானாக இயங்குகின்ற தென்றும், நற்காட்சி, நல்லோதி ( நன்ஞானம்) நல்லொழுக்கம் என்னும் மூன்றும் வீடுபேற்றிற்குக் கரணகம் (காரணம்) என்றும், உருவம், நுகர்ச்சி, குறிப்பு, எண்ணம், அறிவு என்னும் ஐங்கந்தமும் கெடுவதே வீடுபேறென்றும், தம் மனம்போனவாறு பிறழவுணரும் திரிபுணர்ச்சியாம். வீட்டையளிப்பவன் இறைவனே யாதலின், அவனருளின்றி எவனும் வீடுபெற வியலாதென்பதாம். வீடுபெறாவிடத்து நரகர், விலங்கு, மக்கள், தேவர் என்னும் நால்வகைப் பிறவிவகுப்பில் முன்போலுழலுவதே திண்ணம். அப்பிறப்புத் துன்பமேயாதலின் 'மாணாப்பிறப்பு' என்றார். இதனால் திரிபுணர்ச்சி பிறப்பிற்குக் கரணகமாதல் கூறப்பட்டது

மணக்குடவர்

பொருளல்லாதவற்றைப் பொருளாகக் கொள்கின்ற மயக்கத்தினாலே உண்டாம்; மாட்சிமையில்லாத பிறப்பு. இது மெய்யுணருங்கால் மயக்கங் காண்பானாயின் பிறப்புண்டாமென்றது.

புலியூர்க் கேசிகன்

உண்மையில் பொருளற்றவைகளைப் பொருளாகக் கருதி உணர்கின்ற மயக்கத்தினாலேயே, சிறப்பற்ற பலவகைப் பிறப்புக்களும் உண்டாகின்றன

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)மெய்யுணர்தல் (Meyyunardhal)